அமெரிக்கா தனது முன்னாள் எதிரியான வியட்நாமுக்கான ஆயுத விற்பனை தடையை முழுமையாக அகற்றுவதாக ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். கொம்மியுனிஸ வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஒபாமா அந்நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த முன்னெடுப்பு “பனிப்போரின் அடையாளங்களை” அகற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடன் எல்லை பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கும் வியட்நாமுடனான உறவை பலப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. எனினும் இந்த தடை நீக்க முடிவு அமெரிக்காவின் சீனா உறவில் தொடர்புபட்டதல்ல என்று ஒபாமா வலியுறுத்தினார். “வியாட்நாமுடனான உறவை சீர்படுத்தும் நீண்ட செயல்முறையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக” ஒபாமா குறிப்பிட்டார்.
எனினும் வியட்நாமில் மனித உரிமை விடயத்தில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே தடை தளர்த்தப்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது. “மனித உரிமை விடயம் தொடர்பிலான கட்டுப்பாடுகளுடனேயே ஆயுத விற்பனை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஆனால், இந்த மாற்றத்தின் மூலம் வியட்நாம் தனது சுய பாதுகாப்பிற்கான உபகரணங்களை பெற வழி ஏற்படும்” என்றும் ஒபாமா சுட்டிக்காட்டினார். பல தசாப்த காலமாக நீடிக்கும் இந்த ஆயுத விற்பனையை அகற்றும்படி வியட்நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 2014இல் பகுதி அளவில் தடை அகற்றப்பட்டது.
கொம்மியுனிஸ்ட்கள் தெற்கு வியட்நாமை கைப்பற்றுவதை தடுப்பதற்காக அமெரிக்கா வியட்நாமில் யுத்தம் செய்து 41 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலேயே ஒபாமா அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த யுத்தத்தில் சிவிலியன்கள், கொம்மியுனிஸ போராளிகள், மற்றும் தெற்கு வியட்நாம் படையினர் என்று பல மில்லியன் வியட்நாமியர் கொல்லப்பட்டனர். அதேபோன்று 58,000க்கும் அதிகமான அமெரிக்க படையினர் பலியாகினர். 1975இல் யுத்தம் முடிவுக்கு வரும்போது கொம்மியுனிஸ்ட்கள் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.