இலங்கையின் தூதுக்குழு ஒன்றினை உடனடியாக மொஸ்கோவிற்கு அனுப்பவேண்டும் எனவும் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டுக்கு உதவுவதற்கு தயங்கினாலும் கூட மனிதாபிமான ரீதியிலான சகல ஒத்துழைப்புகளையும் ரஷ்யா இலங்கைக்கு வழங்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி உள்ளிட்ட தூதுக்குழுவிற்கும் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தூதுவர் யூரி மடெரி இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் தொடர்பில் இலங்கையின் தீர்மானங்களை அடுத்து ரஷ்ய அதிகார மட்டத்தில் இலங்கை மீதான அதிருப்தி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. எனினும் இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது. எனவே இலங்கை ஜனாதிபதி மட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதியுடன் உடனடியாக தொலைபேசி உரையாடல் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்,
அதுமட்டுமல்ல இலங்கையின் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் விதமாக ரஷ்யாவின் முழுமையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உடனடியாக தேவைப்படும் நிலக்கரி, எரிபொருள், எரிவாயு மற்றும் உரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு ஒன்றினை ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ரஷ்யாவிற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கையின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதித் தொகையில் எஞ்சிய தொகையை தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளுக்காக ஒதுக்க வேண்டுமாயின், அது குறித்து பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் கோரிக்கை விடுத்தால் நிதி உதவிகளை வழங்க ரஷ்யா தயங்காது எனவும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.