புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், மேலும் கூறுகையில்,
வியாழேந்திரன் எம்.பி, எமது கட்சியிலிருந்து விரைவில் விலக்கப்படுவார். அவர், இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம். அவர் விரைவில் எம்.பி பதவியை இழக்கநேரிடும் என்றார்.
விலைபோன வியாழேந்திரன் எம்.பியை நீங்கள் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா என இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சுமந்திரன் எம்.பியிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘விலை போன ஒருவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லையென சுமந்திரன் எம்.பி பதிலளித்த நிலையிலேயே, அக்கேள்விக்கு, கட்சியின்; தலைவரான சம்பந்தன், மேற்கண்டவாறு பதிலளித்தார்.