பஞ்சாப், ஹரியாணா மாநிலவிவசாயிகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பஞ்சாப், ஹரியாணா மற்றும் டெல்லி தொழில் வர்த்தகசபை (பிஹெச்டி சேம்பர்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் சஞ்சய் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 36 நாட்களாக விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் காரணமாக 2020-21ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்’’ என்று தெரிவித் துள்ளார்.
டெல்லியின் எல்லைப் பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அனைத்துவிதமான துறைகளுக்கான சரக்கு போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இரண்டு அம்சங்களில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. அதாவது வைக்கோலை எரிப்பதற்கு அபராதம் விதிப்பது மற்றும் மின்சார மசோதா 2020 ஆகியவற்றுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ள முடிவை சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மூன்று வேளாண் மசோதாக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.