விவசாயச் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரெஹானா உள்ளிட்டோர் சமீபத்தில் கருத்து தெரிவித்தனர்.இதற்கு, இந்திய வெளியுறவுத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
‘இந்தப் போராட்டத்தை இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கு உட்பட்டே பார்க்க வேண்டும். அமெரிக்க பாராளுமன்றில் சமீபத்தில் நடந்த வன்முறை ஏற்படுத்திய அதே தாக்கத்தை, டில்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையும் ஏற்படுத்தியுள்ளது’ என, இந்திய வெளியுறவுத் துறை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற இந்தியாவுக் கான குழுவின் துணைத் தலைவர் பிராட் ஷெர்மான் கூறியுள்ளதாவது:இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்தியாவுக்கான குழு ஆலோசனை செய்தது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதிக்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட, இணைய வசதியை திரும்ப அளிக்க வேண்டும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சாந்துவை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.