மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 18 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாளை முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சிறைத்துறை டிஐஜியாக இருந்த லக்மிந்தர் சிங் ஜக்கர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது வேலையை நேற்று இராஜினாமா செய்தார். இதற்கான அதிகாரபூர்வமான கடிதத்தை இன்று தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து டிஐஜி லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், “வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாகப் போராடிவரும் எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக எனது வேலையை நான் இராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.