(எஸ். ஹமீத்)
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்த பின் இரண்டே நாட்கள் மட்டுமே வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ட்ரம்பின் மனைவியும் அமெரிக்க முதற் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப் அதன் பின் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். இவரது வெளியேற்றத்துக்குக் காரணமெனப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
46 வயதான மெலானியா, பதினோரு வயதான தனது ஒரே மகன் பர்ரனுடன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி நியூயோர்க் நகரத்திலுள்ள அவர்களது 100 மில்லியன் டாலர் பெறுமதியான மாளிகையில் வசித்து வருகிறார். இனி ஒரு போதும் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பப் போவதில்லையெனச் சில ஊடகங்கள் தெரிவித்த போதும், நியூயோர்க்கிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகனுடைய படிப்பில் இடையூறுகள் இல்லாமலிருக்க வேண்டுமென்பதற்காகவே அவர் வெளியேறினார் என்றும் இந்த ஜூன் மாதப் பரீட்சைகளையடுத்து அவர்களிருவரும் நவம்பர் மாதமளவில் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவர் எனவும் வேறு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முதற் பெண்மணி என்பதால் மெலானியாவுக்குப் பாரம்பரியக் கடமைகள் இருக்கின்றன. ஆயினும், அந்தக் கடமைகளைச் செய்யுமாறு அவர் ட்ரம்பின் முன்னைய மனைவியின் மகளான இவன்கா ட்ரம்பையும் இவன்காவின் கணவரான ஜெராட் குஷ்னரையும் பணித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அண்மையில் நடந்த முக்கியத்துவமிக்க வருடாந்த அல்பல்பா (Alfalfa) இரவு விருந்தில் இவன்காவும் அவரது கணவருமே கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், தனது மனைவியும் மகனும் ஒவ்வொரு வார இறுதியிலும் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார்கள் எனக் கூறியிருந்த போதிலும் கடந்த வார இறுதியில் அவர்கள் வந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையிருக்கும் வாஷிங்க்டனுக்கும் மெலானியாவும் அவரது மகனும் தற்போது வசிக்கும் நியூயோர்க்குக்கும் இடையில் 200 மைல்கள்தான் தூரம் என்பது மேலதிக தகவல்.