வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டன

11 இந்திய வங்கிகளில் 18 வெளிநாட்டு வங்கிகளால் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டு வங்கிகள் குறித்த கணக்குகளை திறந்துள்ளதாகவும் இந்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு அடுத்த படியாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தும் குறித்த கணக்குகளை மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்டு வங்கிகளும் திறந்துள்ளன.

இந்திய ரூபாயை இலங்கையில் வெளிநாட்டு நாணயமாக நியமிப்பதற்கான இந்திய மத்திய வங்கியின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கிஅறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சார்க் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய மத்திய வங்கியிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வருடம் ஜூலை மாதம் முதல், டொலர் பற்றாக்குறை உள்ள நாடுகளை, ரூபாய் பரிமாற்ற பொறிமுறைக்குள் கொண்டு வர இந்திய அரசாங்கம் முயன்று வரும் நிலையில், இலங்கையர்களும் இந்தியர்களும் ஒருவருக்கொருவர் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய அளவான அமெரிக்க டொலர் கிடைக்காத நிலையில் இந்திய ரூபாயை இலங்கையில் சட்டப்பூர்வ வெளிநாட்டு நாணயமாக நியமிப்பது, நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதுடன், நாட்டுக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.