சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரின் உயிரியல் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாகவே மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் போதே, இந்த விடயம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு சினமன் கிராண்ட் மற்றும் ஷங்கிரி-லா ஆகிய இரு ஹோட்டல்களிலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் விடுதியிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி உயிரிழந்த குண்டுதாரிகள் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனைகள் நிறைவுசெய்யப்பட்டு, உயிரிழந்தவர்கள் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குண்டுதாரிகள் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனை அறிக்கைகள், இன்றைய தினம் (21), குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய இருவர் தொடர்பான டீஎன்ஏ பரிசோதனை உறுதிப்படுத்தல்கள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக, சிரியாவுக்குச் சென்ற முதலாவது இலங்கையர்கள் என்று கருதப்படும் மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட், அவரின் சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றுமோர் இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோராலேயே அந்தப் பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், அந்தப் பணத்தின் ஒருதொகுதி, தெஹிவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்றுமுன்தினம் (15) கொண்டுவந்தது.
மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட் என்பவரின் பெற்றோரால், கல்கிஸை, ஸ்ரீமத் பரான் ஜயதிலக்க மாவத்தையிலுள்ள வீட்டுக்கு, அந்தப் பணத்தின் ஒருதொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில், அவருடைய தந்தை, தன்னுடையப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார் என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருந்த தன்னுடைய மகனான மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட்டின் தங்கையான அஸ்மாவுடன், இந்த நாட்டுக்கு வரும் ஒருவரால் பொதியொன்று கொண்டுவந்து தரப்படுமென, சிரியாவிலிருந்த மூவரில் மற்றொருவரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவரால், 2018 செப்டெம்பர் மாதத்தில், ஒருநாளன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தனது முறைப்பாட்டில் தந்தை தெரிவித்துள்ளார்.
வட்ஸ்அப்பின் ஊடாக அழைப்பொன்றை ஏற்படுத்தும் வரையிலும் அந்தப் பொதியை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் மொஹமட் முஹுசீன் இஷாக் அறிவுறுத்தியதாக, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வட்ஸ்அப் அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், சில நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மறைத்திருந்த பெண்ணொருவர், தன்னுடைய வீட்டுக்கு வந்து, சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருக்கும் மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவருக்கு வழங்குமாறுகூறி, பொதியொன்றை, தன்னுடைய மகளிடம் வழங்கியுள்ளார். அந்தப் பொதியை சோதிக்காமல், வீட்டிலிருந்த அலுமாரியில் அப்படியே வைத்துவிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், நான்கு நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மூடிய நபரொருவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைரிடம் கொடுக்குமாறு மற்றொரு பொதியை வழங்கிவிட்டுச் சென்றார் என்றும், அந்தப் பொதியையும் அதே அலுமாரியிலேயே வைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
“அதன்பின்னர், மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவர் தனக்கு அழைப்பையெடுத்தார். அந்தப் பொதிகளிலிருக்கும் பணத்தை, அமெரிக்க டொலர்களாக மாற்றி, தான் அறிவிக்கும் வரையிலும், வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு அறிவித்தார்.
“அவ்விரு பொதிகளையும் பிரித்துப்பார்த்த போது, அதில் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்தது.
“அந்தப் பணத்தை வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்கள் மூன்றுக்கு எடுத்துச்சென்று, அமெரிக்க டொலர்களாக மாற்றி, வீட்டில் படுக்கையறையில் பாதுகாப்பாக வைத்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
“மேலே குறிப்பிட்டவாறே, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்தப் பணத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளோம்.
இந்த 23,500 ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களும் சட்டபூர்வமான தாள்களாக என்பதுத் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு, மத்திய வங்கிக்குக் கட்டளையிடுமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக” கொண்டுவந்தனர்.
முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க டொலர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியின் நிதி முகாமையாளருக்கு கட்டளையிட்டது.