ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட ஜோர்டானைச் சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாரதாரத்துறை அமைச்சு, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர புனித யாத்திரையின் போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.