களனிவெளி பிளான்டேசனுக்கு உட்பட்ட நானுஓயா உடரதல்ல தோட்டத்தில், சுமார் 275 தோட்டத் தொழிலாளர்கள் தொழில் புரிந்துவருகின்ற நிலையில், இவர்கள் தோட்ட நிர்வாகத்தின் ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று (21) ஈடுபட்டனர்.
தமக்கான தொழில்சார் உரிமைகளையும் சலுகைகளையும் தோட்ட முகாமையாளர் திட்டமிட்ட அடிப்படையில் தடுத்து வருவதாகவும் ஓராண்டு காலமாக அவரின் அடக்குமுறை தொடர்வதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதி கோரியுமே 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள், “மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த கங்காணிமாருக்கு, பெயர் போடப்பட்டு நாள் சம்பளமும் வழங்கப்பட்டது. இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த இரு கங்காணிகளை, தோட்டதுரை நீக்கிவிட்டு குறைந்தச் சம்பளத்துக்கு இருவரை நியமித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது. முன்னர் இருந்த நடைமுறை தொடரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டு மணித்தியாலம் வேலைசெய்தாலும் அரைநாளுக்கான சம்பளமே வழங்கப்படுவதாகவும் கடும் மழையிலும் 18 கிலோகிராம் கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினார்.
ஒரு கிலோகிராம் குறைந்தாலும் அரை நாள் பெயர் வழங்கப்படுவதாகவும் கொழுந்தை அளவிடும் கருவியிலும் சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், இதனால் தமது உழைப்பு களவாடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தினத்தில் வாக்களிக்கப்பதற்காகச் சென்றபோது, அன்றைய தினமும் அரை நாள் பெயரே போடப்பட்டுள்ளதாகவும் கேட்டால், அரசாங்கத்திடம் கேட்குமாறு துரை எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
“எமக்கு அன்றைய நாளுக்கான முழு சம்பளம் வேண்டும். சட்டரீதியாக, தொழில் ரீதியாக எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தோட்டதுரையின் செயற்பாடே இதற்குக் காரணம். தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளிதோட்டத்துக்கே கொழுந்து அனுப்படுகின்றது. ஓய்வூதியம் பெற்றவர்களை அழைத்து, கொழுந்து உள்ள மலைகளில் கொழுந்து கொய்து அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்றது. தோட்டத்தில் வேலைசெய்யும் எம்மை, கொழுந்து இல்லாத மலைகளுக்கு சென்று பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது” எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.