வேலைநிறுத்தப் போராட்டத்தின் நோக்கத்தை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டு மக்கள், நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல என்றும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வியுற்ற தலைமைக்கும், பிரதமரின் பல குறைபாடுகளுக்கும் எதிரான நடவடிக்கையாலேயே நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தான் உடல் தகுதி உடையவர் என்று பிரதமர் கூறியுள்ள போதிலும், அவரது செயல்கள் நாட்டின் அந்தஸ்தைக் கெடுத்துவிட்டதாகவும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக பதவி விலகல்களை மக்கள் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, தொழிற்சங்கங்கள் ஒன்று திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்க உறுப்பினர்கள், பணியிடங்களில் கறுப்புக் கொடி ஏற்றுவார்கள் என்றும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் வேலைக்குச் செல்லும்போது கறுப்பு உடை அணிந்து செல்வார்கள் என்றும் கூறினார்.
வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமாக மாற்றுவதற்கு தம்மை வற்புறுத்தக் கூடாது என்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதுடன், இந்த இலக்கை அடைய எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தாம் கோரும் முடிவுகள் கிடைக்கும் வரை இன்று ஆரம்பிக்கப்படும் போராட்டம் தொடரும் என்று கூறிய அவர், மே 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை அனுஷ்டிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் 240,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் பங்குபற்றவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.