வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்றது. அதில், பங்கேற்றிருந்த ஊடகவியலாளர், 1,000 ரூபாய் தொடர்பில் கேள்வியெழுப்பினார். அதற்கு, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில பதிலளித்தார்.
‘பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தில் இரு தரப்பும் இணைந்து இருக்கும் வரை, இரு தரப்பினரது இணக்கமின்றி, சம்பளத் திருத்தத்தை முன்னெடுக்க முடியாது’ என்றார்.
கூட்டொப்பந்த காலம் இம்மாத இறுதியில் நிறைவுக்கு வருகிறது. சம்பள விவகாரத்தில், இருதரப்புக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாமை காரணமாக, வழமைபோல புதிய கூட்டொப்பந்தம் ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக, சம்பள நிர்ணய சபை ஊடாக, அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக, தொழில் அமைச்சரின் ஊடாக அதிகரிக்க, அமைச்சரவை தீர்மானித்தது எனத் தெரிவித்த அவர், இந்தத் தீர்மானமானது குறித்த கூட்டொப்பந்தக் காலம் நிறைவடைந்த பின்னரே செயற்படுத்தப்படும் என்றார்.