“வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த நிலையில் காணப்படும் 120 குளங்களை புனரமைப்புச் செய்வதுக்காக நல்லிணக்க செயலணியால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவருமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க செயலணியால் சங்கானை மண்டிக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இரண்டு ஆண்டுகளாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் நல்லிணக்க செயலணியால் 500 செயற்றிட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வீதிகள், பாலங்கள், பாடசாலைகள், சுகாதார வசதிகள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது நீர் தேவை என்று தான் நான் கருதுகின்றேன். யாழ்ப்பாணப் பிரதேசம் மிகவும் வரண்ட பிரதேசமாக உள்ளது. இலங்கையிலேயே மிகவும் வரண்ட பிரதேசம் யாழ்ப்பாணம் என்று நான் எண்ணுகிறேன். நீர் வசதி குறைந்த பிரதேசமாகவும் இது உள்ளது.
இந்தப் பிரதேச மக்களில் பெருமளவானவர்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள். விவசாய தேவைகளுக்காக மட்டுமல்லாது குடிநீருக்கான தட்டுப்பாடும் ஏற்படுகின்றது. ஆகையால், இந்த மக்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்த போது கடந்த காலத்தில் அழிந்துபோன குளங்கள் இந்தப் பிரதேசங்களில் உள்ளன என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம்.
இங்கிருந்த குளங்களில் பெருமளவான குளங்கள் தற்போது அழிந்துபோயுள்ளன. சில குளங்கள் இருந்த பகுதிகள் தற்போது மூடப்பட்டு வீடுகள், கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போது இருநூறு குளங்கள் அபிவிருத்தி செய்யப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன.
அவற்றில் இருந்து 120 குளங்களை அபிவிருத்தி செய்வதுக்கான நடவடிக்கைகளை நல்லிணக்க செயலணியும் மாகாண சபைகளும் நீரியல்வளத் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த நிலையில் காணப்படும் 120 குளங்களை புனரமைப்புச் செய்வதற்காக நல்லிணக்க செயலணியால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.