எனவே, இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.
போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.
இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர்.
உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.