19.03.2024 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணி

இந்த நிலைமை அடுத்து வரும் நாட்களில் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை நேற்று (18.03.2024) காலை 6.00 மணி முதல் இன்று (19.03.2024) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் வடக்கு மாகாணத்தின் சராசரி ஆவியாக்க அளவு 11 மி.மீ. ஆகும். சில இடங்களில் சராசரியை விட மிக உயர்வாக பதிவாகியுள்ளது. எனவே ஒரு நாளின் ஆவியாக்க அளவே, 11 மி.மீ. என்றால் ஒரு மாதத்தின் 30 நாளுக்கான ஆவியாக்க அளவு 330 மி.மீ. ஆகும்.

நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தின் சராசரி சாரீரப்பதன் 68 வீதமாகும்.இவ்வாண்டு மார்ச் மாதம் இதுவரை 1 மி.மீ. மழை கூடக் கிடைக்கவில்லை. எதிர்வரும்21, 22,23, மற்றும் 24ம் திகதிகளில் வெப்பச்சலன செயற்பாட்டால் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடுமையான ஆவியாக்கம் எமது தரை மேற்பரப்பு மற்றும் தரைக் கீழ் நீர்நிலைகளின் நீரின் அளவை கணிசமான அளவு குறைக்கும். ஆனால் நம்மில் ஒருவரும் இந்த மாற்றத்தை கருத்தில் கொள்ளவில்லை. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அதிகளவு நீர் நிறைந்திருக்கும் மாரியிலும் பார்க்க கோடையில் நாம் அதிகளவு நீரைப் பயன்படுத்துகின்றோம். அதிகளவு விரயமும் செய்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தரைக்கீழ் நீரின் அளவு சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பின்னரே தரைக்கீழ் நீரை மீள் நிரப்பக்கூடிய கன மழைக்கு வாய்ப்புண்டு.