பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர் ரவிந்திர பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறினார்.
அதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய சந்தேக நபர்கள் 747 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் நூறு பேருக்கு மேல் நீதிமன்றத்தில் 41 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் 14 குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களும் அதற்கு புறம்பாக மேலதிக விசாரணைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பான விசாரணைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளில் கடந்த நவம்பர் 11ஆம் கோட்டை நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 48 சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி முறையான விசாரணைகள் நடைபெறுகின்றன என்றார்.