உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.
தேர்தல் சட்ட விதிகளை மீறிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளென நிரூபிக்கும் பட்சத்தில் இவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் இவர்களுடைய உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் அவர் கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“எந்தவொரு வேட்பாளரும் தற்போது சிறையில் இல்லை. சில ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளனர். இவர்களால் இன்று தேர்தலில் வாக்களிக்க முடியாது போகும்.” என்றும் அவர் கூறினார்.
“இலஞ்சம் கொடுத்தல், பலவந்தம் செய்தல், அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கெதிராக தண்டனை கடுமையாக அமையலாம். இவர்கள் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டால் இவர்கள் வெற்றிப் பெற்றாலும்கூட எச்சந்தர்ப்பத்திலும் இவர்களது உறுப்புரிமை நீக்கப்படலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 640 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. இதில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலேயே ஆகக்கூடுதலான 158 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இம்முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 136 பேரில் 25 பேர் வேட்பாளர்கள்.
இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக பொலிஸார் 191 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளனர். இதில் போஸ்டர்கள் காட்சிபடுத்தியமை தொடர்பாகவே 127 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 372 பேரில் 37 பேர் வேட்பாளர்களென்றும் அவர் கூறினார்.