வரவு-செலவுத்திட்ட யோசனைகளை முன்வைத்தல் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகும். இது சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத்திட்டமாகும்.
இதற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
2022ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களுக்கு திரட்டு நிதியத்திலிருந்து மற்றும் அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபாய் அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அரசியலமைப்பின் xvii பிரிவுக்கு அமைய அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், வரிவிதிப்பு, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
நாளை முதல் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு நாள்கள் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி பி.ப 05.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நவம்பர் 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசெம்பர் 10ஆம் திகதி வரை 16 நாள்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.