மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
in News, சி.பி.ஐ – சி.பி.எம், விவசாயிகள் by வினவு, March 12, 2018
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
பிறந்து சில நாட்களே ஆன தனது கைக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அந்த தாய். மார்ச் 6 -ம் தேதி கிளம்பியது அந்த நீண்ட நடைபயணம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் துவங்கிய பயணம் ஐந்து நாட்களில் சுமார் 180 கிலோ மீட்டர்களைக் கடந்து மார்ச் 11 -ம் தேதி மும்பை நகரை அடைந்துள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பெரும்பாலானோர் வயதான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள். ஒவ்வொருவரின் பின்னும் ஏதோவொரு கதை இருக்கத்தான் செய்கிறது.
வற்றிய மார்பில் பாலைத் தேடி ஏமாந்து போய்க் கதறியழுத தனது குழந்தையை நினைத்துப் பார்க்கிறார் அந்த இளம் தாய். கடந்த சில நாட்களாக கூலி வேலைக்குச் செல்லாததால் சில நூறு ரூபாய்கள் இழப்பு. எனினும், குழந்தையைத் தெரிந்தவர்களின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு பேரணியில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். “உங்களுக்கென்று நிலம் ஏதுமில்லையே பிறகு ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தீர்கள்?” என்ற கேள்விக்கு “ஆம் நிலம் இல்லை தான். நான் கூலி வேலை தான் செய்கிறேன். ஆனால், விவசாயம் அழிந்து போனால் எனது வாழ்க்கையும் அழிந்து போகும் என்பதாலேயே பேரணியில் கலந்து கொள்ளக் கிளம்பினேன்” என பதிலளித்துள்ளார்.
கோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர் வாகெரே. விவசாயிகள் பேரணியைக் குறித்துக் கேள்விப்பட்ட இவர் நாசிக்கில் உள்ள நாலேகாவ்ன் எனும் தனது கிராமத்தில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் நடந்து வந்து பேரணியில் இணைந்துள்ளார். பல தலைமுறைகளாக வனத்தில் உள்ள நிலத்தில் பயிர் செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அந்த நிலங்களின் மேல் எந்த உரிமையும் இல்லை. வன உரிமைச் சட்டம் 2006 -ன் படி பழங்குடி விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனினும், அந்தச் சட்டம் காகிதத்தில் மட்டும் இருப்பதால் மக்களுக்கு இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
கோலி மகாதேவ் எனும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி சங்கர் வாகெரே
வாகெரேவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் நெல் பயிரிடுகின்றனர். பருவ மழை பொய்க்காத காலங்களில் ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் நெல் விளையும். அரசு ஒரு குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது எனக் குறிப்பிட்ட வாகெரே, ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்கே 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்கிறார். பருவ மழை பொய்த்துப் போகும் சமயங்களில் உற்பத்தியாகும் அளவு குறையும், அதே சமயம் நெல்லுக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்பட மாட்டாது. பெரும்பாலான விவசாயிகள் கடன் வலையில் வீழ்வதும், திருப்பிக் கட்ட வழியின்றித் தற்கொலை செய்து கொள்வதற்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. உலகிலேயே தனது உற்பத்திப் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையில்லாத ஒரே உற்பத்தியாளர் விவசாயி தானென்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இன்னொரு விவசாயி.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் செங்கொடி ஏந்திக் கிளம்பியிருக்கும் இந்தப் பேரணி உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் இரவு உறக்கத்திற்காகவும் மட்டுமே நின்று பின் துவங்குகின்றது. விவசாயிகளும் பழங்குடியினரும் உணவுக்கென கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பழைய செய்தித்தாள்களில் சுற்றிக் கொண்டு வரப்பட்ட வறண்ட சப்பாத்தியை உண்கின்றனர்; சில முதியவர்கள் தங்கள் மூதாதைகளை நினைவூட்டும் நாட்டுப்புற பாடல்களைப் பாடுகின்றனர்.
மார்ச் 11 -ம் தேதி மும்பையின் எல்லையைத் தொட்ட பேரணியினர் காலை நேரப் போக்குவரத்து நெரிசல் தீரும் வரை காத்திருந்து விட்டு மதிய வேளையில் ஆசாத் மைதானத்தை நோக்கிச் சென்றுள்ளனர். “நான் பள்ளிக்கூடத்திற்கே சென்றதில்லை. ஆனால், கல்வியின் முக்கியத்துவம் எனக்கும் தெரியும். பிள்ளைகளுக்கு இது பரீட்சை நேரம். அவர்கள் படிக்கச் செல்லும் நேரத்தில் எங்களது பேரணி நகருக்குள் புகுந்து போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி விடக்கூடாதே என்பதற்காகத் தான் காத்திருந்தோம்” என்கிறார் ஆசாத் மைதானத்தை வந்தடைந்த விவசாயி ஒருவர்.
முதலாளித்துவ பத்திரிகைகள் இந்தப் பேரணியை “செங்கடல்” (Sea or Red) என வருணிக்கின்றன. சிபிஎம் கட்சி சார்புடைய விவசாய சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பேரணி விவசாயக் கடன் ரத்து, பழங்குடியினருக்கு நில உரிமை, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் மும்பையைச் சூழ்ந்துள்ளது “செங்கடல்”. மார்ச் 12 -ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக பேரணியின் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மார்க்சிஸ்டு கட்சியின் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் அதன் பாராளுமன்ற சட்டமன்ற “புரட்சியின்” வரம்புகள் விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சியை சிதைத்து விடும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும், மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணியானது அடிப்படையில் விவசாயிகளின் பொருளாதாய வாழ்க்கையின் சீரழிவில் இருந்து தோன்றி இருப்பதால் மார்சிஸ்டுகள் விவசாயிகளைத் தொடரும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
விவசாயிகளின் பேரணியை மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவரே நேரில் சென்று வரவேற்று இருக்கிறார். சிவசேனா, தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்துப் பேசி வருகின்றன. இந்தச் சூழலில் ஒருசில தற்காலிக கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு இப்போராட்டம் முடித்துக் கொள்ளப்படக் கூடாது.
விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை அடையும் வரை விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே பேரணியில் பல்வேறு துன்பங்களுக்கு இடையில் கலந்து கொண்டிருக்கும் விவசாயிகள் பழங்குடியினரின் தியாகங்களுக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்கும்.
(பதிவு)