‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. கூடவே எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் ஓரணியாக இணைந்து கூட்டணி அமைத்துள்ள வியூகம் தொடங்கி கச்சத்தீவு விவகாரம் வரை வைரலாக விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) அசுர வளர்ச்சி தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள், கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை சற்றே கவலையடையச் செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையமும் போலிச் செய்திகள் மற்றும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்களை விரைந்து அடையாளம் காண்பது அவசியம் என தெரிவித்துள்ளது. அந்த அளவுக்கு ஏஐ துணை கொண்டு உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோ (போலி வீடியோ), வாய்ஸ் குளோனிங் ஆடியோ கன்டென்டுகள் இந்த தேர்தலில் தனது சித்து விளையாட்டை காட்டும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் கடந்த 30 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட உதாரணங்களும் உள்ளன. 1990-களில் தொலைபேசி வழியில் தொடங்கி 2014 தேர்தலில் ஹாலோகிராம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது தேர்தல் களம் ஏஐ காலத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக ‘மக்களவைத் தேர்தல் – 2024’ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.