யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றதுடன் அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற, தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதைப் பொருளையும் நுகர தொடங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ரில்கோ கோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர், த.திலகராஜ், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்க அறிக்கையில், 04.10.2023 நிகழ்வு தொடர்பாக மேற்படி விடயம் தொடர்பில் சில வாரங்களிற்கு முன்னர் ஐதுசன் மற்றும் சாலினி எனும் பெயர்களையுடைய இருவர் எம்மைத் தொடர்பு கொண்டு DJ Night நிகழ்வு ஒன்றை செய்வதற்கு எமது ரில்கோ கோட்டலில் இடம் வேண்டும் என்று கேட்டார்கள்.
நிகழ்நிலை கட்டண நுழைவுச்சீட்டு (Online) நிகழ்வு என்ற காரணத்தால் மேற்படி நிகழ்விற்கான அனுமதியை மாநகர சபையிடம் பெற்றுவருமாறு கேட்டுக்கொண்டோம். அதன்பிரகாரம்
அந்த அனுமதியை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்வு நடந்து முடியும் வரை மாநகர சபை பிரதிநிதிகள் மேற்படி நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பான பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்து ஹோட்டலுக்கு வெளியே 06 பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
எமது ஹோட்டலில் 100 – 140 பேர் வரை கொள்ளக்கூடிய மண்டபம் (Hall) வாடகைக்கு விடப்பட்டிருந்தது. எமது நிறுவனம் சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டது. நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர். உண்மையில் இந்நிகழ்வை ஒருங்கமைத்த இளம் ஒருங்கமைப்பாளர்கள் இந்நிகழ்வை திறம்பட நடாத்தினார்கள். அவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.
எமது ஈழநாட்டை மிகவும் நேசிக்கின்றேன். பிரித்தானியாவில் இருந்து போர் நடக்கும் போது இங்கு வந்து ரில்கோ ஹோட்டலை கட்டியுள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளோம். எமது ஹோட்டலில் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. நாட்டின் முக்கிய பிரமுகர்கள் தங்கி இருந்துள்ளார்கள். நாம் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம்,கூடைப்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுக்களிற்கும் குறுந்திரைப்பட தயாரிப்பு துறைகளின் முன்னேற்றத்திற்கு அனுசரணையாளராகவும் உறுதுணையாகவும் இருந்துள்ளோம். பாடசாலைகளிற்கும் கிராமங்களிற்கும் உதவிகள் செய்துள்ளோம்.
கடந்த O2 நாட்களாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பானதும் முற்றிலும் நடைபெறாத சம்பவங்களையும் திரிபுபடுத்தி எழுதப்பட்டமை மன வேதனைக்குரியவை. எமது இளைஞர்கள் தான் எமது மண்ணின் எதிர்கால தலைவர்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவர்கள் மேல் குற்றங்களை சுமத்தாமல் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். எமது
வேறுபாடுகளை மறந்து எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை நாமே ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(Tamil Mirror)