(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
விபரீதங்கள் நிகழ்வதற்கும் நிகழ்த்தப்படுவதற்கும் இடையிலான வேறுபாடு பெரிது. விபரீதங்கள் பெரும்பாலும் எதிர்பாராமால் திடீரென நிகழ்பவை. ஆனால், நிகழ்த்தப்படுகின்ற விபரீதங்கள் அவ்வாறல்ல. அவை மனிதர்களால் தெரிந்து திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவை. ஆனால், அதற்கும் அறிந்தும் அறியாமல் நிகழ்ந்தது போன்றதொரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட விபரீதங்களும் நிகழ்ந்த விபரீதங்களாக அறிவிக்கப்படுகின்றன. இப்போது உலகின் கவனம் சீகா வைரஸை நோக்கியதாகத் திரும்பியிருக்கிறது. வடகிழக்கு பிரேசிலில் கடந்தாண்டு ஓகஸ்ட் முதல் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கத் தொடங்கியதன் பின்னணியிலேயே சீகா வைரஸ் அறியப்பட்டது. இக்காலப்பகுதியில் அப்பகுதியில் பிறந்த 4,180 குழந்தைகள் சிறிய தலைகளுடனும் பிற குறைபாடுகளுடன் பிறந்தன. பின்னர் இவ்வைரஸ் பிறக்கும் குழந்தைகளை மட்டுமன்றிப் அனைவரையும் தாக்கக் கூடியது என அறியப்பட்டது. இப்போது உலகளாவிய ரீதியில் 17 இலட்சம் மக்கள் இவ்வைரஸின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.