‘சண்’ எனத் தோழர்களாலும், நண்பர்களாலும் அன்பாக அழைக்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன், ஏப்ரல்07ஆம் திகதி (2016) கனடாவின் ரொறன்ரோ நகரில் தமது 63ஆவது வயதில் காலமானார். தோழர் சண் 1960களில் நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு வாலிபர் இயக்கத்தின் மூலம் தமது பொது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் மார்க்சிய அரசியலில் ஈடுபாடு கொண்டு, இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் வட பிரதேச குழு உறுப்பினராகவும், அக்கட்சி 1975இல் ஆரம்பித்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் செயல்பட்டார். கிளிநொச்சியில் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட விவசாயிகள் சங்க வேலைகளிலும் ஈடுபட்டார். எழுத்தாற்றல்மிக்க அவர், பல கட்டுரைகளையும், சில கதைகளையும் எழுதியுள்ளார். வடக்கில் போர் உக்கிரமடைந்த காலத்தில் இடம் பெயர்ந்து தமிழகத்திலும், ஜேர்மனியிலும் சில ஆண்டுகள் வாழ்ந்த அவர், கடைசி ஏழு வருடங்களாக குடும்பத்துடன் கனடாவில் வாழ்ந்து வந்தார். தமது கடைசிக்காலம் வரை, சமூக நடப்புகள் மீது உன்னிப்பான அவதானமும், விமர்சனமும் கொண்டவராக வாழ்ந்ததுடன், பரந்துபட்ட நட்பு வட்டாரத்தையும் கொண்டிருந்தார். அவரது இழப்பு, அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, அவருடன் பழகிய, அவரை நேசித்த அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிட்டுள்ளது.