நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனின் அலுவலகம், நேற்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருடைய அலுவலகம் முற்றுகையிடப்பட்டு வடமாகாண சபை உறுப்பினர்களால் திங்கட்கிழமை (11)மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளரை எவரும் சந்திக்க முடியாதவாறும் மாவட்டச் செயலாளர், தனது அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாதவாறும் நேற்று மதியம் 12 மணி வரையில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Month: April 2016
வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், இன்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள செம்பொன் வாய்க்கால் இந்து மயானம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காணிகளின் சொந்தக்காரர்களும் அதிகாரிகளும் காணிகளைப் பார்வையிட்டனர். இக்காணிகளிலிருந்த 7 வீடுகளும் தற்போதும் நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.