(முருகபூபதி)
மருத்துவர் பொன். சத்தியநாதன்
தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில்அவரைப்பார்த்தபோது, அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ கலாநிதி நளாயினி, ” அப்பா… யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?” எனக்கேட்கிறார். அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் பரமநாதனும் – நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரியுமா…? தெரியாதா…? என்பதும் எமக்குத்தெரியாது.
அவர் கடந்த சில வருடங்களாகவே மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும். எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து – பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம் திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார். இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவராக தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப் பற்றேதுமின்றியும் பெரியாரிஸம் பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர். அவர் பற்றுக்கொண்டிருந்தது தமிழில்தான். தமிழுக்காக எதனையும் செய்யும் இயல்பும் அவரிடமிருந்தமையால், அவர் இழந்ததும் அதிகம். தியாகம் செய்ததும் அதிகம்.
யாழ்ப்பாணம் மருத்துவக்கல்லூரியில் அவரிடம் கற்றவர்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் மகன் மருத்துவர் பொன். அநுரா. அவரின் சிறப்பியல்புகளை எம்மிடம் அநுரா சொல்லியிருக்கிறார். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்காக தேவைப்பட்ட மனித சடலங்களை தேடி வடபுலத்தில் பின்தங்கிய பிரதேசங்களுக்கெல்லாம் அலைந்தவர் சத்தியநாதன். கலாசாரப்பிடிப்புள்ள தமிழ் சமூகத்தில் மரணிக்கின்றவர்களின் சடலங்கள் சமயாசார முறைப்படியே அடக்கமாகிவிடும். அல்லது தகனமாகிவிடும். அத்தகைய சமூக அமைப்பில் எங்காவது அனாதைப்பிரேதங்களை தேடிப்பெற்று வந்து மாணவர்களுக்கு போதிப்பதையும் தவமாக மேற்கொண்டிருந்தவர்தான் சத்தியநாதன் என்ற தகவலையும் அறிந்திருக்கின்றோம். யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில்தான் உரும்பராய் சிவகுமாரன் சயனைட் அருந்தி தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார் என்றும், சிவகுமாரனை அங்கிருந்து அப்புறப்படுத்தி தமிழகத்திற்குகொண்டு சென்று சிகிச்சைக்குட்படுத்துவதற்கு சிலர் அந்தரங்கமாக முயற்சிகளை முன்னெடுத்தவேளையில், அதற்கு உதவமுயன்றும் அங்கிருந்த பாதுகாப்புச்சூழ்நிலையினால், அவரால் முடியாமல்போய்விட்டதாக அவருடைய நெருங்கிய நண்பர் சட்டத்தரணி ரவீந்திரன் சொல்லியிருக்கிறார். தமிழ்த் தேசியத்தில் தீவிரம்கொண்டிருந்த அவர், தமிழ்ப்பண்பாட்டை பேணவேண்டும் என்பதிலும் பேச்சொன்று செயல் வேறு ஒன்றாக வாழாமல் அதிலும் முன்மாதிரியாக செயல்பட்டவர். தமிழ் நிகழ்ச்சிகளுக்கு வெள்ளைவேட்டி அணிந்து வருவதையே மரபாகக்கொண்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டுக்கு பட்டுவேட்டி சால்வையுடன் வருகைதந்து உரையாற்றியவர்தான், தான் முதல் முதலில் சந்தித்த சத்தியநாதன் எனச்சொல்கிறார் பின்னாளில் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா தமிழ்ச்சங்கம் சார்ந்த பணிகளில் அவருடன் இணைந்திருந்த நவரத்தினம் இளங்கோ. மாணவனாக மெல்பனுக்கு வந்து லத்ரோப் பல்கலைக்கழகத்தில் தான் படிக்கும்போது, அதே பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் படிக்கவந்தவர்தான் மருத்துவர் சத்தியநாதன் எனச்சொல்கிறார் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தெய்வீகன். மெல்பனில் உதயம் பத்திரிகை தொடங்கியபோது முதல் இரண்டு இதழ்களையும் வடிவமைத்து அச்சிடுவதற்கு ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கியவர்தான் சத்தியநாதன் எனச்சொல்கிறார் உதயம் இதழில் அங்கம் வகித்த இராஜரட்ணம் சிவநாதன். மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களுடனான நட்புறவு எனக்கு 1989 ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான் தோன்றியது. எனக்கு இவரை அறிமுகப்படுத்தியவர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். அந்த வருடம் மெல்பனில் தமிழ்க்கலை மன்றம் பார்க் வில்லில் அமைந்திருக்கும் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் கலைமகள் விழாவை முதல்தடவை நடத்தியபோது அதற்கு வருகை தந்திருந்த சத்தியநாதன் அவர்களை ஒரு மருத்துவராக அறிந்துகொண்டதுடன் தமிழ்க் கலை, இலக்கிய நேசராகவும் இனம் கண்டேன்.
இலங்கையிலிருந்த காலப்பகுதியில் தாம் எழுதிய நாடகம் ஒன்றை இலங்கை கலாசாரப்பேரவையின் நாடகப்பிரதி தெரிவுக்குழுவிலிருந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி நிராகரித்துவிட்டார் என்று கோபத்துடன் சொன்னார். அந்தப்பிரதியை வைத்து அதே நாடகத்தை மெல்பனில் மேடையேற்றுங்கள் எனச்சொன்னேன். ஆனால், அவர் அதற்கு முயற்சிக்கவில்லை. பிறிதொரு நாடகத்தில் தோன்றி நடித்தார். மெல்பனில் தமிழ் நூலகம், தமிழர் தகவல் நிலையம், வள்ளுவர் கோட்டம் அமைத்தல், தமிழ்ப்பத்திரிகை நடத்தல் என்பன அவரிடம் குடியிருந்த கனவுகள். அவற்றில் தமிழ்ப்பத்திரிகையும் நூலகமும் நனவாகின. சிறிது காலத்தில் அவையும் மறைந்தன. தமிழ் உலகம் – Tamil World என்னும் இருமொழிப்பத்திரிகையை சிலருக்கு மாதாந்தம் சம்பளம் வழங்கி அச்சிட்டு வெளியிட்டார். தமிழ்நாட்டிலிருந்து வெளியான சுப. வீரபாண்டியனின் நந்தன் இதழை அவுஸ்திரேலியாவுக்கு தருவித்து விற்றுக்கொடுத்தார். அதற்காக வானொலி நேர்காணல்களும் வழங்கி சந்தாதாரர்களைத் திரட்டினார். நாம் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் அமைத்து கலைமகள் விழா, பாரதி விழா நடத்தியபோது இடம்பெற்ற மாணவர்களுக்கான போட்டிகளுக்கு தேவைப்பட்ட பணப்பரிசல்களை வழங்கி உதவினார். ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவுமிருந்து அதன் முத்தமிழ்விழா முதல் அனைத்து தமிழ்சார்ந்த பணிகளுக்கும் முன்னின்று உழைத்தார். அகதியாகவும் மாணவர்களாகவும் வந்த பல தமிழ் இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தார். மெல்பனுக்கு வருகைதரும் எந்தவொரு தமிழக, இலங்கை, சிங்கப்பூர், மலேசிய பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரைச்சந்திக்காமல் சென்றதில்லை. அவருடைய இல்லத்தில்தான் தமிழக ஓவியர் புகழேந்தியையும், கவிஞர் அறிவுமதியையும், மணிமேகலை பிரசுரகர்த்தா ரவி தமிழ்வாணனையும், திரைப்பட துணை இயக்குநர் மலையப்பனையும், எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான பெரியார் தாசனையும் சந்தித்திருக்கின்றேன். சிட்னியில் உலகத்தமிழ்ப்பண்பாட்டு மாநாடு நடந்தபொழுது கண்காட்சிக்கு வைப்பதற்காக நூல்கள் தேவைப்படுகிறது என்று நூலகரும் அரசியல் ஆய்வாளருமான முருகர் குணசிங்கம் தொடர்புகொண்டபொழுது, சத்தியநாதன் அவர்களின் ஊடாகத்தான் சில நூல்களை அனுப்பிவைத்தேன். அந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து நடிகர் சிவகுமார் தமது துணைவியாருடன் வருகை தந்திருந்தார். அன்றிலிருந்து சிவகுமாரினதும் நண்பரானவர்தான் சத்தியநாதன். மெல்பனில் நடந்த நிகழ்ச்சியில் இருவரதும் துணைவியர்கள்தான் மங்கல விளக்கேற்றினர்.
இலங்கையிலிருந்து ஞானம் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன் முதல் முதலில் 1999 இல் மெல்பனுக்கு வருகை தந்த சமயத்தில் எமது இல்லத்தில் நடந்த இலக்கியச்சந்திப்பிலும் சத்தியநாதன் கலந்துகொண்டதுடன் அவருடனும் நட்புறவைப்பேணி, மீண்டும் அவர் மெல்பனுக்கு தமது துணைவியாருடன் வருகை தந்தசமயத்தில் வீட்டுக்கு அழைத்து உபசரித்தார். இவ்வாறு தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எவர் பங்காற்றுகின்றனரோ, அவர்களுடனெல்லாம் நட்புறவைப்பேணிவந்தவர் சத்தியநாதன்.
2001 ஆம் ஆண்டு நாம் முதல் தடவையாக மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியவேளையில் பகல்பொழுதில் நடந்த கருத்தரங்கில் தகவல் தொடர்பில் மொழி வடிவ மாற்றங்கள் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். 2002 ஆம் ஆண்டு சிட்னியில் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் விழா நடந்தவேளையிலும் அங்கு வருகைதந்து கருத்தரங்கில் ஒளி, ஒலி காட்சிப்படுத்தலுடன் உரையாற்றினார். மெல்பன் பாரதி பள்ளியின் அதிபர் மாவை நித்தியானந்தனின் அழைப்பில் வருகைதந்து பாரதி பள்ளி ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்ட உரையை காட்சிப்படுத்தலுடன் நிகழ்த்தினார். கணினியில் தமிழ் பதிவேற்றம் நிகழத்தொடங்கியதும் இந்தத்துறையில் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிலரை முழுநேர ஊழியர்களாக அமர்த்தி இறுவட்டுகளும் வெளியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். ஒன்றியத்தமிழ் தோழமை அமைப்பை உருவாக்கி, மெல்பன் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நூல்களின் கண்காட்சியையும் தமிழ் அறிஞர்கள் பங்ககேற்ற மாநாடும் நடத்தினார். அதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து பெரியார்தாசன், மலையப்பன், ரவி தமிழ்வாணன் ஆகியோரையும் மற்றும் மலேசியா அறிஞர்களையும் அழைத்தார். சிட்னியிலிருந்து கவிஞர் அம்பி வருகை தந்தார். மெல்பனைச்சேர்ந்த பாடும் மீன் சிறிகந்தராசா, தெ. நித்தியகீர்த்தி முதலானோரும் இம்மாநாட்டில் உரையாற்றினர். இம்மாநாட்டில் சத்தியநாதன் எழுதி இயக்கிய குறும் படமும் திரையிடப்பட்டது. அதில் மல்லிகா மனோகரன், விசாலினி ரவீந்திரன், ஈஷாணி ஆறுமுகசாமி, கண்ணன், ரேணுகா ஆறுமுகசாமி ஆகியோர் நடித்தனர்.
அந்தக்கதையிலும் தமிழ்ப்பண்பாடு, புகலிடத்தில் தமிழினத்தின் அடையாளம் குறித்துத்தான் அவர் சிந்தித்திருந்தார். தமிழ்த்தேசிய அரசியலில் மாறுபட்ட கண்ணோட்டம் மிக்கவர்களிடையே நிழல் யுத்தங்கள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையிலும் சத்தியநாதன் அனைவருடனும் தோழமையுடன் உறவைப்பேணி வந்தவர். 1989 காலப்பகுதியில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட வேளையில் மெல்பனில் கண்டனக்கூட்டம் நடத்தவேண்டும் என்று அவருடன் நெருக்கமாக இருந்த சிலர் இலங்கைத்தமிழ்ச்சங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். அச்சமயம் ‘சோமா’ சோமசுந்தரம் சங்கத்தின் தலைவராக இருந்தார். லண்டனில் தமிழர் தகவல் நிலையம் இயங்கிய காலத்தில் அதில் இணைந்திருந்த சட்டத்தரணி ரவீந்திரனும் மருத்துவர் சத்தியநாதனும் கந்தசாமி கடத்தப்பட்ட செய்தியினால் கலவரமடைந்திருந்தனர். மெல்பனில் கந்தசாமியின் மறைவுக்கு கண்டனம் தெரிவிப்பதா..? அல்லது அஞ்சலி செலுத்துவதா..? என்ற வாதப்பிரதிவாதமும் தோன்றியது. இந்நிலையில் சத்தியநாதன், சட்டத்தரணி ரவீந்திரன், ‘சோமா’ சோமசுந்தரம், இராஜரட்ணம் சிவநாதன் ஆகியோரிடையே ஒரு சந்திப்பை தமது இல்லத்தில் நடத்தினார். அதற்கு நானும் சென்றிருந்தேன். கந்தசாமிக்காக மெல்பன் வை. டபிள்யூ. சி.ஏ. மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் சத்தியநாதன் உரையாற்றுகையில் தனது ஆழ்ந்த துயரத்தை கண்டனத்துடன் வெளிப்படுத்தினார்.
1987 இல் மெல்பனுக்கு தமிழ் அகதிகள் வந்துகொண்டிருந்த வேளையில் சட்டத்தரணி ரவீந்திரன் இல்லத்தில் அகதிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கும் சத்தியநாதனும் ‘சோமா’ சோமசுந்தரமும் வருகை தந்து உரையாற்றினர். 2002 இல் ஒன்றியத் தமிழ் தோழமை அமைப்பினால் மெல்பன் பிரஸ்டனில் அவர் தமிழ் மகாநாடு நடத்தியதைத்தொடர்ந்து, தம்வசமிருந்த ஒரு கட்டிடத்திலேயே தமிழ் நூலகம் அமைத்து தம்மிடமிருந்த பல நூல்களையும் அதற்கு ஒப்படைத்து அதனை வளர்த்தெடுத்தார். அந்த நூலகத்தின் தலைவராக அவரும் செயலாளராக நானும் இயங்கினோம். அதனைத்தொடர்ந்தும் தமிழ் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் தமிழ் அச்சகம் அமைப்பதற்காகவும் சிலரை முழு நேர ஊழியர்களாகவும் நியமித்தார். நூலகத்தினை அவரது அருமைத்தாயாரே மங்கல விளக்கேற்றித்தொடக்கிவைத்தார். அக்காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து திருவள்ளுவர் சிலையை வரவழைத்து தமிழ்மக்களிடம் விநியோகித்தார். திருவள்ளுவருக்கு வரவேற்பு அதிகரித்ததையடுத்து, சிலைகளை இங்கேயே வடிவமைத்து வழங்கினார். இவ்வாறு அவர் மேற்கொண்ட சில தமிழ்ப்பணிகளில் அவருடன் இணைந்திருந்தமையால் அவரிடமிருந்த பல நல்லியல்புகளையும் தெரிந்துகொள்ளமுடிந்திருக்கிறது.
தமிழ் பேசும் குழந்தைகளிடத்தில் மிகவும் பிரியமாக இருந்தார். எமது குழந்தைகள் தமிழில்தான் பேசவேண்டும் என்பதை பெற்றோருக்கு வலியுறுத்திவந்தார். அதனால் மெல்பனில் தமிழ்ப்பாடசாலைகளுக்கு ஊக்கமளித்தார். எவருக்கும் உதவும் பரோபகார குணசீலனாகத்திகழ்ந்தார். அதனால் அவர் இழந்தது அதிகம்தான். தமிழ் நாட்டில் வெளியாகும் குமுதம் தீராநதியிலும் சத்தியநாதனின் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அதிலும் கணினியின் ஊடாக தாம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் ஆய்வுகள் குறித்தே சொல்லியிருக்கிறார். அவர் தமிழுக்காக செய்ய நினைத்தது அதிகம். அவர் தமிழுக்காக கண்ட கனவுகள் அதிகம். எதிர்பாராதவிதமாக நினைவு மறதி உபாதை அவரை பாதித்ததனால் அவர் சிந்தித்த பல ஆக்கபூர்வமான பணிகள் செயலுருப்பெறவில்லை . அவரது கனவுகள் பல நனவாகவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் சிட்னி கம்பன் கழகத்தினர் அவருக்கு சான்றோர் விருது வழங்குவதற்காக என்னிடம் பரிந்துரை கேட்டனர். கம்பரையும் தன்னையும் மறந்திருக்கும் அவருக்கு நீங்கள் தரப்போகும் சான்றோர் விருதைக்கூட அவரால் புரிந்துகொள்ளமுடியாத நிலையிலிருக்கிறார் என்று சொன்னேன். எனினும் கம்பன் கழகத்தினர் அவருக்கு சான்றோர் விருது வழங்கினர். விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கமும் அவர் படுக்கையிலிருக்கும் வேளையில்தான் பாராட்டி கௌரவித்தது. அவர் வாழும்போது தமிழை வாழவைக்கப் பாடுபட்டார். தமிழுக்கு கௌரவம் வழங்கினார். அவர் பற்றுக்கொண்டிருந்த தமிழ் அவர் எதிர்பார்த்தவாறு வாழ்ந்துகொண்டிருக்கும். ஆனால், அவரோ எம்மத்தியில் நினைவுகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்.