அன்பார்ந்த தமிழ் மக்களே!
இந்தநாட்டு மக்களை பொறுத்தவரையில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பது பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்வரும் 16 ஆம் திகதி சட்டபூர்வமாக ஜனாதிபதியாகின்ற ஒரு சம்பிரதாயம் தான் இருக்கப்போகிறது.
இந்த வேளையில் தமிழ் மக்களாகிய நாங்கள் நிதானமாக புத்திபூர்வமாக பகுத்தறிவோடு சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த உசுப்பேற்றும் அரசியலை நடத்துபவர்கள் கடைசியில் இரத்தக்களரிகளுக்கே வழிவகுத்திருக்கிறார்கள். இந்தநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது என்பது உண்மை அந்தப்போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன் இந்த சபையிலும் பலர் இருக்கிறார்கள் அது ஒரு காலத்தின் தேவையாக இருந்தது இந்தநாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை என்பதனால் தான் கோரிக்கைகள் மேலும் மேலும் மேலும் மேலே போய் அதற்கான ஒரு போரும் போராட்டமும் நடக்கவேண்டி ஏற்பட்டது.
ஆனால், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தோடு வந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால் அதை பாதுகாத்திருந்தால் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அதற்கு பிந்திய 25 வருடங்களில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்திருக்கிறோம். தெற்கிலும் மக்களும், பல ஆயிரக்கணக்கான படையினரும் பலியாகியிருக்கிறார்கள் 1990 முதல் 2009 வரை மரணத்தை தவிர வேறு எதுவும் தமிழ் மக்கள் கண்டதில்லை. 2009 இற்கு பின்பு இன்று வரை யுத்தம் நடைபெற்றிருந்தாலும் அரசியல் தீர்வோ, சமாதானமோ வந்திருக்குமா? வந்திருக்காது. இன்னும் இலட்சக்கணக்கான மக்களும், இளைஞர்களும் பலியாகியிருப்பார்கள் இழப்புக்களே மிஞ்சியிருக்கும்.
யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்தம் பல துன்பியல் விளைவுகளை தந்து முடிந்திருக்கிறது. அவற்றைப்பற்றி நாங்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டேயிருக்க முடியாது. எதிர்காலம் நோக்கி நாங்கள் செல்ல வேண்டும். இந்த நாட்டில் தான் ஒரே நாட்டில் தான் ஐக்கியமாக சமாதானமாக சகோதரத்துவத்தோடு வாழ வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம். அதனை நாங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி நாங்கள் பாதுகாப்பை தேட முடியாது. போகக் கூடியவர்கள் போய்விடுவார்கள். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களோடும், முஸ்லிம் மக்களோடும் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும். ஆனால், சமாதானம் அற்றவர்களாக அல்ல. சமத்துவம் அற்றவர்களாக அல்ல. சம நீதி அற்றவர்களாக அல்ல சமத்துவமாகவும், சம நீதியோடும், பாதுகாப்போடும் சகோதரத்துவத்தோடும் வாழுகின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தருவார்கள் என்று நினைக்கிறோம். அதற்காக முதற்கட்டமாக நாங்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்.