இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த 5 இலங்கையர்கள் உட்பட 9 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பல நாடுகளில் இருந்து விசா பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற முயற்சித்துள்ளதாக பெங்களூர் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா மூலம் செல்ல இனி தடை

சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை, சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம்

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பிரதமர்  தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர்கலந்துகொண்டனர்.

ராஜீவ் கொலை வழக்கு; நளினி உள்பட 6 பேரும் விடுதலை

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உற்பத்திச் செலவீனத்தால் விவசாயிகள் விலகினர்

மரக்கறிகளை உற்பத்திச் செய்வதற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதால், மரக்கறி பயிர்​ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் விவசாயம் செய்வதில் இருந்து விலகியுள்ளனர். இதனால், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தமிழர் தரப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2 பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயம்

எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் பஸ் வண்டியும்  இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

மட்டு. மாவட்டத்தில் அடை மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகின்றது. இன்று  காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.