(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ்பேசும் மக்களது உறவுகள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்படுவதற்கு வேறான ஒரு நடைமுறையும் கையாளப்பட்டது.
ஜிகாத் இஸ்லாமியர்களின் மத ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகும். ஜிகாத் என்பது இஸ்லாமியர்களின் தனித்துவத்தினைப் பேணுவதாக இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களால் நோக்கப்படுகின்றது.
ஆனால் ஜிகாத் என்ற பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கி அவ்வமைப்பினைப் பயன்படுத்தி தமிழ்பேசும் மக்களது உறவினை பிரிப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
விடுதலை இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இணைந்து கொண்டிருந்தனர். அதனைப் பயன்படுத்தி தம்மால் பயிற்றப்பட்டவர்களை தமிழ் விடுதலை இயக்கங்களுக்குள் ஆட்சியாளர்கள் உட்புகுத்தினர். தாமாக இணைந்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் வீடுகளுக்கு அழைப்பதற்கு பலவழிகளையும் கையாண்டனர்.
மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் இருந்து பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திரு்தனர். அவ்வாறு தாமாக இணைந்த இளைஞர்கள் பலரது வீடுகளுக்கு சுரேஸ்காசிம் சென்று வீட்டிலுள்ளவர்களுக்கு அச்சுறுத்தல்களை விடுத்தார்.
இயக்கத்திலிருந்து அவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்புபவர்களின் பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் வழங்கப்படும் அல்லது அவர்களை அரச செலவிலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு தன்னால் ஏற்பாடுகள் செய்யப்படும். அவ்வாறு அவர்கள் இயக்கங்களிலிருந்து வராவிட்டால் குடும்ப உறவுகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்படுவார்கள் அல்லது காணாமல் போவீர்கள் என்ற கண்டிப்பான அச்சுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலமாக தமிழ் விடுதலை இயக்கங்களில் இணைந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் மூலமாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதனால் இணைந்த இளைஞர்கள் சிலர் தமது பொறுப்பாளர்களுக்குத் தெரிவிக்காமலே தமது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நடவடிக்கை இரண்டுவிதமான நன்மைகளை சுரேஸ்காசிமிற்கு கொடுத்தது. ஒன்று முஸ்லிம் இளைஞர்களை அகற்றுதல் இன்னொன்று திரும்பும் இளைஞர்கள் மீது விடுதலை இயக்கங்களுக்கு கோபம் ஏற்படுதல். அத்துடன் முஸ்லிம் மக்கள் மீதும் வெறுப்பு ஏற்படுதல். அவரது எதிர்பார்ப்பு சரியாகவே இருந்தது.
வீடுகளுக்கு திரும்பிய இளைஞர்களைத் தேடி விடுதலை இயக்கங்கள் சென்று உறவினர்களை துன்புறுத்திய சம்பவங்கள் பல நடந்தன. இந்நடவடிக்கைகளினால் முஸ்லிம் இளைஞர்க்ள விடுதலை இயக்கங்களில் இணைவது பின்னாட்களில் முற்றாகவே நின்று போனது.
கிண்ணியாவில் பிரிந்து வந்தவர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால் மூதூரிலிருந்து யாரும் வெளிநாட்டுக்ச் செல்லவில்லை, ஊரிலேயே இருந்தனர். தமது வீடுகள் தவிர்த்து வேறிடங்களில் தமது இரவு நேரத்தை கழித்தனர்.
மூதூரில் ஜிகாத் ஓர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் விடுதலைப் அமைப்பிலிருந்து ஓடி வந்தவர்கள் இணைக்கப்பட்டார்கள். ஜிகாத் அமைப்பிற்கு சுரேஸ்காசிம் இனால் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. ஆயுதப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நடுத்தீவு, அக்கரைச்சேனை, ஆகிய இடங்களில் தனியார் காணிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஜிகாத் என்ற புனித பெயரில் அமைப்பு இருந்ததனால் பல இளைஞர்கள், சிறுவர்கள் அமைப்பில் இணைந்தனர். நடுத்தீவுக்கு “ஜிகாத்நகர்“ என பெயர் மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துவிட்டது. ஆனால் வேறு சில ஊர்களின் பெயர்கள் அவர்களால் மாற்றியமைக்கப்பட்டன.
ஜிகாத் தமது நலனில் அக்கறையுடன் இயங்கும் என மூதூர் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடைமுறை முற்று முழுதாக மாறியேயிருந்தது.
ஆயதங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என கப்பம் கோருதல் தர மறுப்பவர்களுக்கு அச்சுறுத்தல் செய்தல், சிலர் துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றனர்.
அக்காலத்தில் திரைப்படங்கள் டெக் இல் பார்ப்பார்கள். அவ்வாறு திரைப்படங்கள் பார்ப்பவர்களை துன்புறுத்துவது மொட்டையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள்.
யாராவது காதலில் ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனைகள் வழங்குவது , மொட்டையடிப்பது என அட்டகாசங்களில் ஈடுபட்டார்கள்.
யாரிடம் ஆயுதம் இருக்கின்றதோ அவர்கள் தனியாவோ கூட்டாகவோ களவு, கொள்ளைகளில் ஈடுபட்டார்கள்.
இந்நடவடிக்கைகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து செயற்பட்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஓடிவந்த “மாக்கட்டி“ என்பவராகும். அவருக்கு “காட்டுசாரா“ என்பவரும் உறுதுணையாக இருந்தார்.
ஜிகாத் மீது மூதூரில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு அற்றநிலை மெது மெதுவாக உருவாகி 1989 இல் “மாக்கட்டி“ கொழும்பில் வைத்து சுரேஸ் காசி்ம் இனால் கொல்லப்பட்டதுடன் முற்றாக இல்லாது போனது. (1987 ஆம் ஆண்டில் மாக்கட்டியின் முக்கியமானதொரு செயற்பாடு பின்னால் வருகின்ற ஒரு தொடரில் பேசப்படும்)
முஸ்லிம் சமூகத்தின் உயிர்த்துடிப்புள்ள இளைஞர்களை தவறான கருத்துாட்டல்களினால் தமிழ் விடுதலை இயக்கங்களிற்கு எதிராக திசைதிருப்பி மாபெரும் வெற்றியை மொசாட் பெற்றுக்கொண்டது. சுரேஸ்காசிம் இன் அர்பணிப்புள்ள ஈடுபாடான செயற்பாடுகளே அதற்கான முழுக்காரணமாக இருந்தது.
ஒற்றுமையாக இருந்த தமிழ்பேசும் மக்கள் எண்பதுகளின் பின்னர் உறவு முறிந்தமைக்கான காரணம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இருந்த தலைமைகள் உறவுகளை சரிவரப் பேணாமையே. இரு சமூகங்களினாலும் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை இல்லாமையே.
இனியொரு உறவுநிலை உருவாக வேண்டுமெனில் இருசமூகங்களையு முடையோர் இணைந்த கருத்தொருமைப்பாட்டினடிப்படையில் ஐயம் கடந்து உருவாக்கப்படுகின்ற அமைப்பினால் மாத்திரமே சாத்தியமாகலாம்.