(Thiruchchelvam Kathiravelippillai)
கந்தளாயைச் சேர்ந்த சிற்றம்பலம் விடுதலைப் புலிகளில் தன்னைக் இணைத்துக்கொண்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்ரரின் வழிநடத்தலில் நெறிப்படுத்தப்பட்டவர்.சிற்றம்பலத்திற்கு கணேஸ் என விடுதலைப் புலிகள் பெயரை மாற்றி வைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செல்வாக்கினை மேலோங்கச் செய்தவர்.
அவர் கட்டைப்பறிச்சான், சேனையூர், சம்பூர் பகுதிகளில் அதிகளவில் தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். அவர் சாவடைந்ததன் பின்னர் மேஜர் தர அடிப்படையிலாக பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் ஒரு சிலையினையும் அமைத்திருந்தார்கள். மூதூர் பிரதேசத்தில் விடுதலைப்புலி போராளிக்கு சிலை அமைத்ததென்றால் அது மேஜர் கணேசுக்கு மாத்திரமே.
அவரது வருகைக் காலத்தில் மூதூர் பிரதேசத்தில் ஈரோஸ் அமைப்பே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தியிருந்தது. பருத்த தோற்றமும் வெள்ளை நிறமும் இடுப்பில் எந்நேரமும் கைத்துப்பாக்கியுடன் காணப்படுவார். அவரது பேச்சில் கண்டிப்பு எப்போதும் இருக்கும். அன்பான மனிதன் என பழகுபவர்களால் போற்றப்பட்டவர். அவரின் நடவடிக்கையின் பால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் விடுதலைப்புலிகளில் சேர்ந்தார்கள்.
முஸ்லிம் மக்களிடமும் நெருங்கிய தொடர்பை பேணியிருந்தார். விடுதலைப் புலிகளில் இவரது காலத்தில் தான் பல முஸ்லிம் இளைஞர்களும் விடுதலைப் புலிகளில் சேர்ந்தார்கள். அக்காலத்தில் விடுதலை அமைப்புகளில் சேர்பவர்களில் ஆயுத மோகத்தில் இணைந்தவர்களும் உண்டு. அவ்வாறான கவர்ச்சி மேஜர் கணேசிடம் காணப்பட்டது. 200 சீசீ ஹொண்டா உந்துருளியில் செல்லுகின்ற போது அவரது தோற்றம் பலருக்கு ஒருவித ஈர்க்கையை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மையே.
முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் அமைப்பில் சேர்வதனை புடையினர் பல இடங்களில் பயன்படுத்தி தம்மால் பயிற்றப்பட்டவர்களையும் உட்புகுத்தி அவர்களது வீடுகளுக்கு மாதாந்த சம்பளத்தையும் வழங்கினர்.
அவ்வாறு 1983 இல் படையினரால் பயிற்றப்பட்ட ஒருவர் உறுப்பினராக இல்லாது மிகவும் நெருங்கிய விசுவாசியாக மூதூரைச் சேர்ந்த ஒரு நபர் உட்புகுத்தப்பட்டார். அவருக்கும் மேஜர் கணேசுக்குமான உறுவுகள் மிகவும் பலமாக இருந்தது. இருவரும் ஒன்றாக உந்துருளியில் பயணம் செய்யுமளவிற்கு இருவருக்குமிடையேயான உறவுகள் இருந்தது. ஒன்றாக உணவு உண்பது, ஒன்றாக உறங்குவது ஒனறாக அறுபத்திநான்கு துறையடி என்ற இடத்தில் குளிப்பது என இருவரது உறவுகள் நெருக்கமாக இருந்தது.
தனது நண்பர் மூலமாக யாராலும் முடியாத வேலையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது கணேசிற்கு. அவ்வாறாது தான் நண்பரும் செயற்பட்டார். மூதூரின் எல்லைக் கிராமங்களில் முஸ்லிம் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என முஸ்லிம் மக்கள் விடுதலைப் அமைப்புகள் மீதான எதிர்ப்புணர்வுகள் மெதுமெதுவாக அதிகரித்த வண்ணமிருந்தன. அதற்கான பிரதான காரணமாக இருந்தது முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இக்கொலைகள் விடுதலை அமைப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன என்ற பொய்யான படையினரின் இரகசிய பரப்புரைகளாகும். அத்துடன் 85 இன் பின்னரான வெறுப்புக்குக் காரணமாக கிண்ணியா, மூதூர் நகர் எரிப்புச் சம்பவங்கள் திகழ்ந்தன.
அக்கிராமங்களில் நடைபெற்ற கொலைகளுக்கு காரணமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மீது (புளொட் PLOTE ) மீது விடுதலைப் புலிகளுக்கு ஐயமிருந்தது. அதனை அப்போது புளொட் அமைப்பிற்கு அரசியல் பொறுப்பாக இருந்த வல்லிபுரத்துடன் சந்திப்பினை ஏற்படுத்தி மேஜர் கணேஸ் பேசினார். அவர்களுக்கு தொடர்புகள் இல்லை என மறுக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) செய்திருக்க மாட்டார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்திருந்தார்கள். ரெலோ சிங்களவர்களுக்கு எதிராக மாத்திரமே செயற்பட்டார்கள் என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு.
விடுதலைப் புலிகள் நடுத்தீவிற்கு சென்று வந்தால் நடுத்தீவில் அன்றைய இரவில் எதுவித காரணமும் இன்றி ஒருவர் கொல்லப் பட்டிருப்பார். இவ்வாறே ஆலிம்சேனை, பெரியபாலம், பாலநகர் போன்ற ஊர்களில் எதுவும் அறியா அப்பாவி முஸ்லிம் மக்கள் தமது உயிரை இழந்தார்கள். மேஜர் கணேஸ்
தம்பலகமம் செல்வதற்கு தயாரானபோது தனது நண்பர் நாளை என்றால் தானும் வரமுடியும் எனக் கூற அதற்கு உடன்பட்டு காலயில அன்சார்வீட்ட சாப்பிட்டுற்று போகலாம் என்று நண்பர் கூற அதுவே முடியவாகியது.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் மேஜர் கணேஸ் அவரது முஸ்லிம் நண்பர் சொன்னவாறே சென்று அறுப்பதிநாலில் (ஓர் ஊரின் பெயர் அவ்வாறே அழைக்கப்படுகிறது. செபல்நகர் என்பது ஊர்ப் பெயர்.) காலையில் நீல லுமாலா துவிச்சக்கர வண்டியில் மேஜர் கணேஸ் ஆற்றுத் துறையினைக் கடந்து சென்று கறுத்தாங்காக்கா என்பவரின் வளவு மூலையில் கூட்டிச்செல்வதற்காக அன்சார் நின்றார். புன்னகையுடன் சென்று அன்சாசாருக்கு பக்கத்தில் சென்ற போது பற்றைக்குள்ளிருந்து துப்பாக்கிகள் சடசடத்தன. ஏற்கனவே போடப்பட்டிருந்த திட்டத்திற்கமைய சுரேஸ் காசிமின் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பற்றைக்குள் மேஜர் கணேசின் வருகைக்காக காந்திருந்து ஒளித்திருந்து இருவர் மீதும் சுட்டுக்கொன்றனர். படையினருடன் நண்பரும் நின்றிருந்தார். அன்சார் வரவழைத்து காட்டிக்கொடுத்து மேஜர் கணேசை கொன்றதாகவே தற்போதும் தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நடடிவக்கை விடுதலைப்புலிகளை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது. நண்பன் மூலமாகவே கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் அறிந்திருந்தனர். நண்பர் பின்னர் மூதூரில் இருந்த ஊர்காவல் படைக்கு தலைவனாகி தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
மேஜர் கணேசின் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் முடியாமல் போய்விட்டது.
புளொட் அமைப்பும் விடுதலைப் புலிகளும் நண்பரை கொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழ் மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட முறையில் தனது சகோதர்களை மூதூரின் எல்லைக் கிராமங்களில் ஒருவர் இருவராக சுட்டுக்கொன்றது மேஜர் கணேசின் நண்பரே என்பது பின்னர் தெரியவந்ததனாலேயே புளொட் அமைப்பினர் அவரைச் சுடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஓர் ஊர்காவல்படை வீரன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்த போது தமிழ் மக்கள் அவனை “ஒரு படை வீரனாக நோக்காது முஸ்லிம்
மகனாக நோக்கி முஸ்லிம்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றார்கள்“ என நோக்கியதும் ஒரு படை வீரர் சாகும்போது அவனை “முஸ்லிம் ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்“ என முஸ்லிம் மக்கள் தவறான புரிதல்களை தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டதுமே இரு சமூகங்களுக்குமான இடைவெளிகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக தொடர்ச்சியாக தொடர்ந்தது.