தமிழர்களின் அபிலாஷைகள் வென்றெடுக்கப்படுவதில் காலம் தாழ்த்தப்படுவது அச்சமூகத்தின் அழிவுக்கே வித்திடும் என்று கூறும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், அவ்வாறு காலம் தாழ்த்தப்படுவதன் எதிரொலியாகவே வெடுக்குநாறி மலையின் கையகப்படுத்தலையும் பார்க்க வேண்டும் என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வெடுக்குநாறி மலை கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் அவசியத்தை விபரிக்கின்றார்.
வெடுக்குநாறி ஆதி சிவன்கோயிலை தொல்பொருட் திணைக்களம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கெதிராக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலைமைகள் எவ்வாறுள்ளன?
தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காகவே நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தேன். உண்மையில் அக்கோயில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கோயிலாகும். யுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இந்தக் கோயிலும் பழையபடி கோயிலுக்கு உரித்தான மக்களுக்கே சொந்தமாக, அவர்கள் மலையேறிப் பூஜை, புனஸ்காரங்களைச் செய்யும் இடமாக விளங்கியது. தற்போது அங்கு சிறிய வெள்ளரச மரமொன்று முளைத்திருக்கின்றது. அதனைக் காரணமாகக் காட்டி தற்போது அதனை கையகப்படுத்த தொல்பொருள் திணைக்களம் நினைக்கின்றது. இதற்கு முன்னரும் அங்கு காலங்காலமாக இருந்த வேலாயுதத்தையும் ஏனைய சிலைகளையும் ஆராய்ச்சியெனக்கூறி தொல்லியல் திணைக்களம் கொண்டு சென்று விட்டது. வேலாயுதத்தை மக்கள் முருகக் கடவுளாக நினைத்து ஆண்டாண்டு காலம் வணங்கி வருகின்றனர். அதனை ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றால் அதனை அதன் இடத்தில் இருந்து பெயர்த்தெடுத்துச் சென்றா ஆராய்ச்சி செய்வார்கள்? அதற்கான அதிகாரத்தை தந்தவர்கள் யார்?
இதில் நாங்கள் எல்லோரும் உண்மையாகப் பயப்படுவது, ஒதியமலை போல வெடுக்கு நாறி மலையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடுமோ என்பதுதான். வெடுக்கு நாறியும் பெரும்பான்மையினரின் கைகளுக்குச் சென்றுவிட்டால் முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் பிரதேசமாய் இருப்பதில் எந்தப் பயனும் இருக்காது.
வெடுக்குநாறி மலையில் ஏறுவதென்பது சாதாரணமானதல்ல. அங்குள்ள வேர்களைப் பற்றிய வண்ணமே ஏறிச்செல்ல வேண்டும். அக்கோயிலை பரம்பரையாக பராமரித்தவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள். ஆடி அமாவாசை என்றால் அயலில் உள்ள மக்கள் எல்லோரும் அங்கு சென்று பிதிர்க்கடன்களை நிறைவேற்றுகின்றனர். கதிர்காமம் போன்று இதுவும் போய்விடுமோ என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட ஆலயங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வட மாகாண சபைக்கே இருக்கின்றது. நான் இது குறித்து வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடனும் பேசியிருக்கின்றேன். இதுதொடர்பாக ஒரு பிரேரணையை வட மாகாண சபையில் கொண்டு வருவதற்கு. இது தொடர்பில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை நேரில் சென்று சந்தித்து நிலைமைகளை ஆராய எங்களது எந்தவொரு அரசியல்வாதியும் தயாராக இல்லை. நான் என்றுமே எனது மாவட்டம் என்கின்ற வகையில் செயற்பட்டதில்லை. வடக்கு மாகாணத்தின் எல்லைகள் பாதுகாக்கபட வேண்டும் என்று மாத்திரமே எண்ணுகின்றேன். ஒரு பெண்ணாக அந்த மலையில் வேர்களைப் பற்றிய வண்ணம் ஏறி அதனைப் பாதுகாக்க நான் எண்ணுகின்றேன் என்றால், அதே உணர்வு ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அல்லவா வர வேண்டும்? அதைவிடுத்து எல்லோருமே தங்களது தொகுதிகளைக் கட்டியெழுப்பும் வேலைகளில்தான் மும்முரமாக உள்ளார்கள். நாங்கள் ஆலயத்தை வழிபடப்போனால் தொல்பொருட் திணைக்களம் வந்து தடுக்கின்றது. மீளக் குடியேறப்போனால் வனவிலங்குகள் திணைக்களம் வந்து தடை போடுகின்றது. விவசாயம் செய்யப்போனால் மகாவலித் திட்டத்தால் தடை போடப்படுகின்றது. அப்படியானால் தமிழர்கள் என்ன செய்வது? இதைப் பற்றிப் பேச எந்தத் தமிழ்த் தலைமையும் தயாராக இல்லை. பொறுத்திருங்கள் பேசுவோம் என்றால் எப்போது பேசுவது?
சரியான அரசியல் தீர்வொன்று எட்டப்பட்டாலே எங்கள் நிலம், எங்கள் அபிவிருத்தி எங்கள் உரிமை தொடர்பில் நிரந்தமாய் விடிவு கிட்டும். அதை விட்டு விட்டு, இந்த வருட இறுதிக்குள், அடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என்றால், நாங்கள் அழிந்து தான் விடுவோம்.
வடமாகாணத்தின் புதிய அமைச்சரவை செல்லுபடியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து வட மாகாணத்தின் செயற்பாடுகள் மிகவும் குழப்பகரமாகவே உள்ளன. தற்போது அதன் நிலைமை என்ன?
அது தொடர்பில் மீண்டும் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதால் அது பற்றி ஏதும் என்னால் சொல்ல முடியதிருக்கின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி முதலமைச்சர் தாக்கல் செய்த வழக்கு விசாரணக்கு வரும். அதன் பின்னர் எங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும். அதன் பின்னரே அதனைப் பற்றிப் பேசுவது நல்லதென நான் நினைக்கின்றேன்.
மாகாணசபைத் தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் தற்போது அதிகளவில் அடிபடுகின்ற நிலையில் நீங்கள் எந்தக்கட்சியில் தேர்தல்களில் போட்டியிடுவீர்கள்?
அதனை நான் அல்ல, எனது மக்கள் தான் சொல்ல வேண்டும். எனது பின்னணியில் பல வகையான மக்கள் இருக்கின்றார்கள். என்னை அவர்கள் தான் வாக்களித்து வெல்ல வைத்தார்கள். எனவே அவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும். நீங்கள் தனித்துப் போட்டியிடுங்கள் நாங்கள் வெல்ல வைப்போம் என்று எனக்குச் சொல்வோர் இருக்கின்றனர். ஆனால் எனக்கு ஒட்டுமொத்த மக்களின் கருத்து வேண்டும். நான் அரசியில் இருப்பதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அரசியல் எனது குறிக்கோள் அல்ல. அரசியல் செய்ய வந்தோர் அதனை ஒழுங்காகச் செய்யாததாலேயே நான் பேசவேண்டியிருக்கின்றது.
சில காலங்களுக்கு முன்னர் நீங்கள் துப்பாக்கி வைத்திருந்ததாக வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உங்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார். அவரது குற்றச்சாட்டை எதிர்த்து நீங்கள் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் செய்திகள் வெ ளியாகியிருந்தனவே?
நான் ஏற்கனவே இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோது, அது சபைக்குட்பட்ட பிரச்சினை, அதனை சபையே கையாளும் என அவைத்தலைவர் பொலிஸாரிடம் அறிவித்து விட்டார். பொலிஸாரோ நீதிமன்றோ அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியாதென அவர் நிராகரித்ததார். ஆனால் அதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றி நான் எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருகின்றேன். 13 ஆம் திருத்தச் சட்டம் வந்தபோதுதான் நீதிமன்றின் ஊடாக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. எனவே என் மீதான தேவையற்ற குற்றச்சாட்டு தொடர்பிலும் நான் நீதிமன்றத்தின் உதவியை நிச்சயம் நாடக்கூடியதாகவே இருக்கும்.
ஆனால் அவ்வாறு எனது பாதுகாப்புக்காக நான் துப்பாக்கி அனுமதிப் பத்திரத்தைக் கோரினேனா என்பதை அதனை அறிய விரும்பிம் ஊடகவியலாளர் எவரும் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். பாதுகாப்பமைச்சு நிச்சயம் அதற்கான பதிலை வழங்கும்.
நீங்கள் அமைச்சராகப் பதவியேற்று குறுகிய காலமே ஆகியிருப்பினும், இந்தக் குறுகிய காலத்தில் உங்கள் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சாதகமான மாற்றங்கள் மற்றும் அதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என எவற்றைக் கூறுவீர்கள்?
2018 ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் எனது அமைச்சுக்கான மூலதனச் செலவீனம் வெறும் 83 மில்லியனே. என்னைக் கேட்டால் மகளிர் விவகார அமைச்சென்பது வெறும் பெயரளவிலேயே உள்ளது. யுத்தத்தால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையிலேயே மகளிர் விவகாரத்துறையை நான் பொறுப்பேற்றேன. ஆனால் அந்த அமைச்சை நடத்துவதற்கான ஆளணியும் இல்லை. பணமும் இல்லை. புனர்வாழ்வு அமைச்சும் அவ்வாறானதுதான். யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் அரசானது புனர்வாழ்வுப் பணிகளை எங்களுக்கூடாகச் செய்ய வேண்டும். சில சில பிரச்சினைகளை பேசுவதற்கேனும் பெயரளவில் இந்த அமைச்சு உதவுகின்றனவென்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகின்றது. அது தவிர பல வாழ்வாதாரப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். புனர்வாழ்வு தொடர்பில் சில கொள்கைகளை இயற்றியிருக்கின்றோம்.
அதனைப் போலவேதான் மகளிர் விவகாரத்திலும். அவையெல்லாம் தற்போதைய மாகாணசபையின் பிரச்சினைகளால் முன்னெடுக்கப்படாமல் உள்ளன. கூட்டுறவு தொடர்பில் காணப்பட்ட அனேக பிரச்சினைகளில் ஓரளவுக்கேனும் தீர்வு கண்டிருக்கின்றோம். மக்களுக்கு நிறையவே சேவையாற்ற வேண்டும் என்ற அவாவுடன்தான் நான் வந்தேன். எனக்கு போதிய அவகாசம் இல்லாத போதும் என்னாலியன்ற பணிகளை நான் செய்திருக்கின்றேன்.