(சாகரன்)
அண்மையில் உலகத்தின் ‘முக்கிய” இராஜதந்திரி ஒருவரின் இயற்கை மரணம் நிகழ்ந்தது. ஊடகங்கள் இவரின் மரணத்திற்கு வானளவில் புகழாஞ்சி சூட்டி தமது கடமை முடிந்தது என்றும் திருப்திப்பட்டுக் கொண்டனர். உலக வரலாற்றில் இன்று வரை ‘அடிமைகள்’ என்ற அடைமொழி ஒடுக்கு முறையை சந்தித்து வந்த கறுப்பின மக்களின் வழித் தோன்றல் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களையே குறிப்பிடுகின்றேன். உலகத்தின் பல நாடுகளில் வலிந்த தாக்குத்தலை மேற்கத்தேய கூட்டணி நடாத்திய போது இதனை தடுக்காது இதற்கு அனுமதியும் கொடுத்த கால கட்டம் இவரின் செயலாளர் கால கட்டம்.
போர்த் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளின் அரசுகளும் வீழ்ந்தன. நாட்டு மக்கள் இன்றுவரை நிலையற்ற இராணுவ ஆட்சிப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். மனிதப் படுகொலை சொத்து நாசம் இடம் பெயர்வு அகதிவாழ்வு என்று இன்று வரை அந்த மக்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றனர். எங்கு எப்போது நடைபெற்றன என்பதை இங்கு சிலவற்றை பட்டியல் இடுகின்றேன். இந்த மரணத்தை இட்டு நான் வருத்தப்படாததற்கும் வருத்தப்பட்டவர்கள் தமது தவறுகளை உணர்ந்து கொள்வதற்கும் எரிய காரணங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டவே இந்த பதிவு. கறுப்பினத் தலைவர் என்பதற்காக அவர் ஒடுக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகவும் மனித குல வாழ்விற்கு உறுதுணையாகவும் இருப்பார் என்று பொத்தாம் பொதுவில் பார்ப்பது தவறு. இது பலவேளைகளில் ஒபமாவிற்கும் பொருந்தியே இருக்கின்றது. ஒருவர் எந்த வர்க்கம் சார்ந்து செயற்படுகினறார் என்பதே இங்கு முக்கியம். இதுவே அவர்களின் செயற்பாட்டின் வெளிப்பாடாக அமையும். இதில் அவர் கறுப்பு வெள்ளை இடைநிலை நிறம் எல்லாம் முக்கியம் அல்ல.
அனானுக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி, 1992ஆம் ஆண்டு அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்தை (Department of Peacekeeping Operations) உருவாக்கினார். அதன் முதல் துணைத் தலைவராகவும், 1993இல் அதன் தலைவராகவும் கோபி அனான் நியமிக்கப்பட்டார். அவருடைய காலத்தில், மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை.
- 1994ஆம் ஆண்டு ருவண்டாவில் ஐ.நா அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த போது, அவர்களின் கண்முன்னே, இனப்படுகொலை நடந்தேறியது. 100 நாள்கள் இடம்பெற்ற வெறியாட்டத்தில், பத்து இலட்சம் ருவாண்டியர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்குத் தலைமைதாங்கிய கனடியரான இராணுவத் தளபதி ரோமியோ டிலெயர், இவ்வாறான பயங்கரம் நிகழவிருப்பதை உணர்ந்து, அதைத் தடுக்கத் தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும், அதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவியலும் எனவும் தனது தலைமையகமான ஐ.நா அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்துக்கு அவசரச் செய்தி அனுப்பினார். அதற்குப் பதிலளித்த திணைக்களத் தலைவர் கோபி அனான், “ஐ.நா அமைதி பேணவே வந்துள்ளது. எது நடந்தாலும் ஐ.நா படைகள் முகாமை விட்டு வெளிவரக் கூடாது; நடப்பது நடக்கட்டும்” என்றார்.
- 1993இல் சோமாலிய உள்நாட்டு நெருக்கடியில், அமைதிகாக்கப் புறப்பட்ட ஐ.நா படைகள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து, சோமாலிய போராட்டக் குழுக்களுடன் போரிட்டன. இது ‘மொகடீஷு யுத்தம்’ எனப்படுகிறது. இதில், அமெரிக்கப் படைகள் கடும் தோல்வி கண்டன. அமெரிக்கா தலைமையிலான ஒருமைய உலக ஒழுங்கில், அமெரிக்கா சந்தித்த அதி மோசமான இராணுவத் தோல்வி இதுவாகும். ஐ.நா வரலாற்றில், கொரியப் போருக்குப் பின், ஐ.நா இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபட்டது சோமாலியாவிலேயாகும். தோல்வியின் விளைவாக, ஐ.நாவின் சோமாலிய அமைதிபேணும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பொறுப்பாளி கோபி அனானே.
- யூகொஸ்லாவிய பிரிவினையின் போது, நடந்த பொஸ்னிய யுத்தத்தில், ஐ.நா அமைதிபேணும் பணியில் பங்கேற்றது. யுத்தத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, யூகொஸ்லாவியாவுக்கு எதிரான, இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
அதை, அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, வன்மையாகக் கண்டித்தார். நேட்டோவுக்கு, ஐ.நா அனுமதியைத் தொடர்ச்சியாக, அவர் மறுத்து வந்தார்.
இந்நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையை வாய்ப்பாக்கிய அமெரிக்காவும் நேட்டோவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குப் பொறுப்பான கோபி அனானிடம், பொஸ்னியா மீதான நேட்டோ விமானத் தாக்குதல்களுக்கு அனுமதி கோரியது. அனான், நேட்டோவின் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததோடு, தாக்குதலுக்கு வசதியாகக் களத்தில் இருந்த ஐ.நா படைகளை விலகுமாறும் கோரினார். அனானின் இந்நடவடிக்கையை, பூட்ரஸ் பூட்ரஸ் காலி வன்மையாகக் கண்டித்தார். ஆனால், அனானின் செயல் அவரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு உரியவராக்கியது.
- அனானின் பதவிக் காலத்திலேயே, ஆப்கான், ஈராக் யுத்தங்கள் நடந்தன. அவரது தலைமையின் கீழ், பல முக்கிய விடயங்களில் ஐ.நா வாளாவிருந்தது. எனினும், அவரது காலப்பகுதியில் ‘காக்கும் கடப்பாடு’ (Responsibility to Protect) என்ற கருத்து, கோட்பாட்டுருவம் பெற்றது. அதைப் பயன்படுத்தியே, அமெரிக்காவும் நட்பு நாடுகளும் லிபியா மீது போர் தொடுத்தன. காக்கும் கடப்பாடு என்பது, ஓர் அரசு, தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் கடப்பாடாகும். அக்கடப்பாட்டிலிருந்து அரசு தவறும் போது, கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைக்குப் போகிறது.
பாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு, சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுத்தப்படக் காரணம், அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும்.
‘காக்கும் கடப்பாடு’ என்பது, அடிப்படையில் தடுப்பையே (prevention) பிரதானமாகக் கொண்டது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள் மக்களைக் காக்கத் தவறும்போது, அவை பொருளாதார, அரசியல், இராஜதந்திர, சட்ட, இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவிடுகின்றன. இவ்வாறு, அமெரிக்கத் தலையீடடுக்கு வாய்ப்பாகக் ‘காக்கும் கடப்பாடு’ வடிவம் பெற்றது.
கிட்டத்தட்ட சம காலத்தில் மரணம் அடைந்த சமீர் அமீன் தலைநகர் கெய்ரோவில் பிறந்த பொருளியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். ‘உலக அளவில் மூலதனத் திரட்டல்’ (Accumulation on a World Scale) எனும் அவரது முதலாவது நூல், அமெரிக்காவின் தலைமையிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளை வளர விடாது, ஏகபோக முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாக்குவதைச் சான்றுகளுடன் நிறுவினார். மனித குல வாழ்விற்கு அயராது உழைத்த இவர்களின் மரணம் புகழாஞ்சலி தெரியப்படுத்தப்படாமலே மறைக்கப்பட்ட வரலாற்றுப் போக்கையே தற்போதையய ஆழுமை உலகம் கொண்டுள்ளது வருத்தத்திற்குரியது.
(இந்தக் கட்டுரையை வரைவதற்கு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் கட்டுரை ஒன்றில் இருந்த விடங்களை நான் நேரடியாக உபயோகித்துள்ளேன்)
(Sep 04, 2018)