(என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18)
இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை
1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது பின்வருமாறு வழங்கியது:
(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது.
(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவார். அத்துடன்
(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர், இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது,
(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.
இச்சட்டமூலம், இந்திய வம்சாவழி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்தின்படி, இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜாவுரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இதன் கீழ் ஏறத்தாழ 100,000 இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாக்குரிமை பெற்றிருந்தார்கள். ஆனால், மிகப்பெருந்தொகையான இந்திய வம்சாவழி மக்கள் பிரஜாவுரிமை இல்லாமல் நட்டாற்றில் விடப்பட்டனர்.
நேரு-கொத்தலாவல ஒப்பந்தம்
1954இல், சேர் ஜோன் கொத்தலாவல பிரதமராக இருந்த போது, அவருக்கும் அன்றைய இந்தியப் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குமிடையில் இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் 1954 ஜனவரி 18ம் திகதி ‘நேரு-கொத்தலாவல’ ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இலங்கையானது, வயதுவந்த ஆனால், இதுவரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்திராத உள்நாட்டில் வதிவோரைப் பதிவுசெய்யும் காரியத்தை முன்னெடுக்கும் எனவும், அதன் பின் அப்பதிவில் இல்லாதோர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக கருதப்படுவர் எனவும், அவர்கள் இந்திய மொழிகளிலொன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும், அவர்களை திருப்பியனுப்புவதற்கு வேண்டிய வசதிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் செய்து தரும் எனவும் இணங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் பற்றிக் கருத்துக் கூறிய சௌமியமூர்த்தி தொண்டமான், ‘இந்த ஒப்பந்தம் வெற்றியளிக்க வேண்டுமெனில், இதற்கான டெல்லிப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் காட்டிய முனைப்பை, இதன் அமுலாக்கத்திலும் காட்ட வேண்டும்’ என்றார். இந்த ஒப்பந்தத்துக்கெதிராக அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொண்டு வந்த மசோதா, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், தொண்டமான் ஐயம் கொண்டது போலவே, ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முனைப்புடனோ, செயல்திறனோடோ, நல்லெண்ணத்துடனோ செயற்படவில்லை. 1954 மார்ச் 3ஆம் திகதி நடந்த பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசாங்க அதிகாரிகள், இந்திய வம்சாவழி மக்கள் இலங்கை பிரஜாவுரிமை பெறுவதை ஊக்கமிழப்பு செய்யும் வகையில் நடந்துகொள்கிறார்கள் எனக்குற்றஞ்சுமத்தினார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கத் தரப்பிலும் இந்தியாவின் கெடுபிடிகள் பற்றி விசனம் எழுந்தது. இதுபற்றி தனது சுயசரிதை நூலான ‘ஓர் ஆசியப் பிரதமரின் கதை (ஆங்கிலம்)’-இல் எழுதும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, ‘இந்திய தரப்பில் ஒரு பிரஜையேனும்கூட பதிவுசெய்யப்படாத நிலையில், நாம் வேண்டுமென்றே இந்திய வம்சாவழி மக்கள் இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்து கொள்வதில் அக்கறையீனமாக இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு இந்தியாவின் தரப்பிலிருந்து வரத்தொடங்கியது. அத்தோடு இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் மனதை மாற்றி இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் இந்தியத்தரப்பில் விதிக்கப்பட்டது. இது இந்திய மக்களை எங்களது கையில் முழுமையாக எறிந்துவிடும் செயல்’ எனக்குறிப்பிடுகிறார். அதேவேளை, 1963இல் இலங்கை இராணுவத்தால் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கெதிரான படையணி ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் சட்டவிரோத இந்திய குடியேற்றவாசிகளை (இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத இந்திய வம்சாவழி மக்களை இவ்வாறுதான் அரசாங்கம் அடையாளப்படுத்தியது) கைதுசெய்து, விசேட தடுப்புக் காவலரண்களில் தடுத்து வைப்பதாகும். இதன் பின் இன்னொரு சுற்றுப் பேச்சுவார்த்தை டெல்லியில் இடம்பெற்றது. ஆனாலும், ஒப்பந்தம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாது போனது. இந்தப் பிரச்சினை தொடர்பில் அன்று பெரும்பான்மையான இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ்) முழுவினைத்திறனுடன் செயற்படமுடியாததற்கு அதன் உட்கட்சி முறுகல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை இந்திய காங்கிரஸில் பலம் பொருந்திய ஆளுமைகளாக சௌமியமூர்த்தி தொண்டமானும், ஏ. அஸீஸும் இருந்தனர். ஹட்டனில் நடைபெற்ற 1954ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், அதன் தலைமைப்பதவியை தொண்டமான் சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரத்தை தோற்கடித்து ஏ. அஸீஸ் கைப்பற்றினார், ஆனால் மற்றைய பதவிகள் தொண்டமானின் ஆதரவாளர்களாலேயே வெற்றிகொள்ளப்பட்டது. இருதரப்பு முறுகல் நிலை முற்றிய நிலையில் 1955 டிசம்பர் 13 அன்று ஏ.அஸீஸ், இலங்கை தொழிலாளர்
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கெதிராக அஸீஸ் அவர்கள் தாக்கல் செய்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 1956 ஜனவரி 1இல் அ.அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார்.
‘நாடற்றவர்கள்’ ஆக்கப்பட்ட அநீதி
உண்மையில், சுதந்திர இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையில் அன்று வாழ்ந்துகொண்டிருந்த அனைத்து மக்களும் இலங்கைப் பிரஜைகளாகக் கருதப்பட்டிருக்க வேண்டியவர்களே. ஆனால், ‘இந்திய வம்சாவழி மக்கள்’ என்ற முத்தரை, துரதிர்ஷ்டவசமாக இந்நாட்டில் கணிசமாக அன்று வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பதிக்கப்பட்டது. இதன் பின்னால் இன அரசியல் இருக்கிறதென்றே பல தமிழ் அரசியல் தலைவர்களும், பல அரசியல் ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். அவர்களின் கருத்துப்படி, 1946இல் (இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்படுதற்கு 2 ஆண்டுகள் முன்பு) இலங்கைச் சனத்தொகையின் 11.7சதவீதம் இந்திய வம்சாவழி மக்களாக இருந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள், பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக பிரித்தானியர்களால் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கினால் இந்திய வம்சாவழித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என இலங்கையில் தமிழர்களின் மொத்த சனத்தொகை கணிசமானளவுக்கு உயர்ந்துவிடும் என்ற பெரும்பான்மைச் சிங்களவர்களின் அச்சம்தான், இந்திய வம்சாவழி மக்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படக் காரணம். ஆனால், இந்த இன அரசியல் வாதத்தை மறுப்போர் இந்தியாவிலிருந்து பிரித்தானியரால் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல, மாறாக அவர்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டார்களோ, அங்கே அவர்களைத் திருப்பி அனுப்புவதுதான் நியாயம் என்ற வாதத்தை முன்வைத்தனர். இந்த வாதம் ஏற்புடையதல்ல. இலங்கையில் வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து குடியேறியவர்கள்தான். இலங்கையின் பிரபல வரலாறு விஜயனிலிருந்து தொடங்குகிறது, விஜயனும் ஒரு வந்தேறுகுடிதானே? சுதந்திர இலங்கையில் அன்று வாழ்ந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களாக அங்கிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை இங்கிருந்த இந்திய வம்சாவழியினரில் எவரேனும் இந்தியப் பிரஜாவுரிமை பெற விரும்பியிருப்பின் அவர்களுக்கு விலக்களித்திருக்கலாம்.ஆனால், இந்நாட்டின் மொத்த சனத்தொகையில், 11.7சதவீதம் இல் வெறும் 0.7சதவீதம் அளவுக்கு மட்டும் பிரஜாவுரிமையை வழங்கிவிட்டு, 11சதவீதத்தினரை ‘நாடற்றவர்களாக’ பலதசாப்தங்களாக வைத்திருந்த அநீதி, இலங்கை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கறையாகும்.
பிரஜாவுரிமைப் பிரச்சினையில் அக்கறை காட்டத்தொடங்கிய ஸ்ரீமாவோ அரசாங்கம்
சேர் ஜோன் கொத்தலாவலவுக்குப் பின்னர், இந்திய வம்சாவழி மக்களினுடைய பிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி எந்த முக்கிய நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை. ஏறத்தாழ ஒரு தசாப்தகாலத்துக்கு பின்னர் ஸ்ரீமாவோ அரசாங்கம் இந்தப் பிரச்சினை தொடர்பில் அக்கறைகாட்டத் தொடங்கியதுடன் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக் கதவுகளையும் தட்டத் தொடங்கியது. இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த ‘நாடற்றவர்கள்’ எனக்கருதப்படும் இந்திய வம்சாவழி மக்களை இலங்கை அரசாங்கம் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முயல்வதை உணர்ந்துகொண்ட சௌமியமூர்த்தி தொண்டமான், 1963 ஒக்டோபர் 4ஆம் திகதி அன்று இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து, ‘நாடற்றவர்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்வது பற்றி கொழும்பில் கதையொன்றடிபடுகிறது. இது போன்ற குதிரைப் பேரத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கை அரசாங்கத்துக்கும், இலங்கை அரசாங்கத்தின் பாகுபாடான சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமிடையிலான பிரச்சினை. இது இந்தியாவின் பிரச்சினை அல்ல’ என்று கூறினார். இலங்கையிலிருந்து ‘நாடற்றவர்கள்’ என அரசாங்கம் முத்திரை குத்தியுள்ள இந்திய வம்சாவழி மக்களை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயல்வதை உணர்ந்துகொண்ட தொண்டமான், அதனைத் தடுப்பதற்காகவே டெல்லி விரைந்தார். விருப்பின் பேரில் மீண்டும் வருவோரை மட்டுமே ஏற்பதாகவும், இதுபற்றிய எதிர்கால பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது கட்டாயம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் கலந்தாலோசிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்தார். தொண்டமானைப் பொறுத்தவரை இந்தச் சந்திப்பு வெற்றிகரமான ஒன்று. குதிரை பேரம் போன்று மக்களை பண்டங்களாக பரிமாற்றிக்கொள்வதில் ஜவஹர்லால் நேருவுக்கு உடன்பாடில்லை என்ற கொள்ளை, இலங்கையில் பிரஜாவுரிமை வேண்டிய இந்தியவம்சாவழி மக்களுக்கு சாதகமானதாக இருந்தது, அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவிடத் துடித்த இலங்கை அரசாங்கத்துக்கு அது சாதகமாக இருக்கவில்லை. ஆனால், 1964 மே 27இல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாரடைப்பினால் உயிரிழந்தார். அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். சாஸ்திரியினுடைய சர்வதேச உறவுகள் பற்றிய அணுகுமுறை நேருவினுடையதை விட வித்தியாசமானதாக இருந்தது. அதன் விளைவாக ஸ்ரீமாவோ அரசாங்கத்தால் சர்வதேச உறவுளில் மிகப்பெருஞ் சாதனை என புகழப்படும் ‘ஸ்ரீமா-சாஸ்திரி’ ஒப்பந்தத்தை சாத்தியமாக்கக்கூடியதாக இருந்தது. இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த, இலங்கை அரசாங்கம் ‘நாடற்றவர்கள்’ என்று கருதிய இந்திய வம்சாவழி மக்களை பண்டங்களைப் பிரித்துக்கொள்வது போல பிரித்துக்கொள்வதற்கு இந்திய-இலங்கை அரசாங்கங்கள் ஒன்றுபட்டன.
(அடுத்தவாரம் தொடரும்…)