வியட்நாம் உலக பொருளாதார மாநாடு ஒரு நோக்கு
(விசு கருணாநிதி)
நான்காவது கைத்தொழில் புரட்சியில் ‘ஆசியானின்’ எதிர்காலம்
வியட்நாமில் நடைபெற்ற உல கப் பொருளாதார மேடையில் முக்கிய பேசுபொருளாகக் காணப்பட்டது நான்காவது தொழில் புரட்சி. அதுவும் செயற்கை மதிநுட்ப (Artificial Intelligence) அச்சுறுத்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதைப்பற்றியதாகவே இருந்தது.
உலக நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்கான இந்த அமைப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புக்கு (Association of South East Asian Countries- ஆசியான்) பொருளாதார மீட்சிக்காக எவ்வாறு உதவலாம் என்பதைப்பற்றி ஆராயுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கணனியின் வரவோடு ஆரம்பமான மூன்றாவது தொழில் புரட்சியைத் தொடர்ந்து தற்போதைய டிஜிற்றல் தொழில்நுட்பம், நான்காவது தலைமுறை, செயற்கை மதிநுட்பத்தின் விளைவுகள் என்பவற்றுக்கு முகங்கொடுப்பதற்காக எவ்வாறு ஆசியான் நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்படுவது என்பதே இந்த மாநாட்டின் தொனிப்பொருள். அதற்கேற்றவாறு ஆசியான் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களும், விசேட அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலான உலகத் தலைவர்களும் தங்களது அனுபவங்களையும் சவால்களையும் இந்த மாநாட்டில் எடுத்துரைத்துள்ளார்கள். பொதுவாக ஆசியானின் தொழில் முயற்சியாண்மையும் நான்காவது கைத்தொழில் புரட்சியும் என்ற கோணத்தில் வியட்நாம் உலக பொருளாதார மாநாடு தீவிர கவனம் செலுத்தியிருக்கிறது.
ஆசியானின் முக்கிய பொருளாதார கேந்திரமாக விளங்கும் இந்து சமுத்திரப் பிராந்திய கடற்பகுதியில் சுதந்திரமான கடற்பயணத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஆசியான் நாடுகளும், ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும் ஒன்றுபட்டு, அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஆசியான் அமைப்பு நாடுகள் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எதிரிநோக்கிய சவால்கள், பூகோள அரசியல் கொந்தளிப்புகள், பொருளாதார மாற்றங்கள், தொழில்நுட்ப இடையூறுகள் நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் பொது நம்பிக்கை சீரழிவிற்கு எவ்வாறு வழிவகுத்திருக்கின்றன என்பதை மாநாட்டில் பங்கேற்ற ஆசியானின் பத்து அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். நாளாந்தம் பெருகி வரும் வேலைவாய்ப்பு கேள்விகளுக்குத் தீர்வு காண்பதில் செயற்கை மதிநுட்பம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால், நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் வேலையையும் வாய்ப்பையும் இழக்கும் நிலை ஏற்படும். மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களைக் கொண்டு சேவையாற்றும் நிலை பல்கிப் பெருகி வருவதால், இளைய சமுதாயம் தொழிலின்றித் தவிக்கப்போகிறது. எனவே, இந்த நான்காவது கைத்தொழில் புரட்சியின் விளைவுகளை எவ்வாறு பகிர்ந்து அனுபவித்துக்கொள்வது என்ற கேள்விக்கு விடைகாணும் ஒரு களமாக வியட்நாம் உலக பொருளாதார மாநாடு விளங்கியது.
உலகப் பொருளாதார மாநாடு
உலக பொருளாதார மன்றம் ஜெனீவா நகரை மையமாக கொண்ட ஒரு பொதுநலசேவை அமைப்பாகும். இவ்வமைப்பின் வருடாந்த கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முக்கியம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்குபெறும் இந்தக் கூட்டத்தில் சுற்றுப்புறச்சூழல், பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் ஏனைய உலக பிரச்சினைகளை பற்றிக் கலந்துரையாடப்படுகிறது.
வியட்நாம் மாநாட்டிலும் ஊடகவியலாளர்கள் பிரதிநிதிகளாகப் பங்குபற்றியிருந்தார்கள். மாநாட்டில் பங்குபற்றிய உலகத் தலைவர்களை அவர்கள் நேரடியாகக் கேள்விகள் கேட்டு விளக்கத்தைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாது தங்களது கருத்துகளையும் முன்வைத்தார்கள்.
ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது என்பதை உலகப் பொருளாதார மாநாடு உணர்ந்து, ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.
வருடந்தோறும் நடத்தப்படும் கூட்டங்களுக்குப் புறம்பாகப் பிராந்தியங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஐரோப்பா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் இவ்வமைப்பு சந்தித்து வருகிறது.
2008 ஆம் ஆண்டு டுபாயில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 700 வல்லுனர்கள் பங்குபெற்ற ”உலகளாவிய நிகழ்வுபட்டியலின் தொடக்கச் சந்திப்பு ” (Inaugural Summit on the Global Agenda) நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் உலகின் தற்போதைய 68 முக்கியமான பிரச்சினைகள் இனங்காணப்பட்டன.
உலக பொருளாதார மன்றம் 1971 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த க்லெளஸ் ஷ்வாப் என்னும் பொருளியல் பேராசிரியரால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தன்னார்வ நிறுவனமாக விளங்கினாலும் பிற்காலத்தில் அஃது உலகப் பொருளாதாரத்தின் சுபீட்சத்திற்குப் பங்களிப்பு செய்யும் அமைப்பாக மாற்றம் பெற்றது. அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்கும் நிலை உருவானது. இன்னமும் இந்த அமைப்பின் தலைவராக விளங்கும் க்லெளஸ் ஷ்வாப் (Klaus Schwab) வியட்நாம் மாநாட்டிலும் பங்கேற்றமை விசேட அம்சமாகும். ஜேர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் பொருளியல் நிபுணருமான இவரே நான்காவது தொழில் புரட்சி பற்றிய எச்சரிக்கையை உலகிற்கு விடுத்திருக்கிறார். புதிய தொழில்நுட்பமான செயற்கை மதிநுட்பம் 99 சதவீத மனிதர்களை மேலும் பிழியும் சாத்தியம் இருப்பதாக பொருளியல் வல்லுநர்கள் விபரிக்கின்றனர். நான்காவது தொழில் புரட்சியின் சாதக பாதகங்களைப் பற்றி க்லெளஸ் தமது நூலில் விளக்கியிருக்கிறார்.
உலகம் அறிந்த ஒரே தொழில் புரட்சி குறித்துப் புத்தகம் எழுதியவர் சார்லஸ் டிக்கன்ஸ். தொழில் புரட்சியால் ஏற்பட்ட துன்பங்களை அதில் அறிந்துகொள்ள முடியும்.
1760 இல் விவசாயத்துறையில் ஏற்பட்ட மாற்றம் முதலாவது கைத்தொழில் புரட்சியெனப்படுகிறது. இரண்டாவது தொழில் புரட்சி என்பது நீராவி இந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஏற்பட்டது என்று ஷ்வாபும், லகார்டேவும் கருதுகின்றனர். எனினும், மின்சார உற்பத்தியோடு ஆரம்பமானதே இரண்டாவது கைத்தொழில் புரட்சி. 1960களில் மூன்றாவது தொழில் புரட்சி ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்ட பில்கேட்ஸும், போல் ஆலனும் அதைக் கொண்டுவந்தனர் என்று வரலாற்றில் பதியப்படுகிறது.
மற்றொரு அமெரிக்கரான ஹென்றி போர்டு மோட்டார் வாகனத் துறையில் ஏற்படுத்திய புரட்சி அனைவரும் அறிந்ததே. மோட்டார் வாகனங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தயாரித்த போர்டு, தன்னுடைய ஆலைத் தொழிலாளர்களே அதை முதலில் வாங்க வேண்டும் என்று ஊதியத்தை அவர்களுக்குத் தாராளமாக வழங்கினார்.
கேட்ஸ், ஆலன் தயாரித்த கணனிகளுக்கு எதிராக உலக அளவில் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடக்க காலத்தில் கணனிகளை இயக்க, ஏற்கெனவே இருந்த பணியாளர்களுக்குப் பயிற்சியும் கல்வியும் தேவைப்பட்டது. ஏற்கெனவே, தட்டச்சு தெரிந்தவர்கள், கல்குலேற்றர்கள் மூலம் கணக்கு போடத் தெரிந்தவர்களுக்குப் பயிற்சி தர நேர்ந்தது. வெகு விரைவிலேயே வயதில் இளையவர்கள் அந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினர். அதன் பிறகு, இணையத்தளம் உள்ளிட்ட வசதிகள் காரணமாகக் கணனித் துறையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகிவிட்டது.
ஷ்வாபின் ‘நாலாவது தொழில் புரட்சி’ நுண்ணியதாக வடிவமைக்கப்பட்ட, செயற்கை மதிநுட்பம் பொருத்தப்பட்ட ரோபாட்டுகள் என்ற இயந்திர மனிதர்கள், உயிருள்ள மனிதர்களுக்குப் பதிலாக அவர்கள் செய்யும் வேலைகளைச் செய்வார்கள் என்கிறது. போர் செய்வதற்கும் பிள்ளைகளைப் பெறுவதற்கும் மட்டும் மனிதர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவார்கள் என்கிறார ஷ்வாப்.
ஷ்வாப் கூறும் தொழில்நுட்பப் புரட்சியானது, மனஉழைப்பு ஊழியர்கள் பலருடைய வேலை வாய்ப்பைப் பறித்துவிடும். வீடுவீடாகச் சென்று விற்பது மட்டுமல்லாமல், அவற்றை வெற்றிகரமாக விற்பது எப்படி என்ற உத்தியைக்கூடத் தாங்களாகவே வகுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. ‘மனித இயந்திர’ங்களுக்கு மட்டுமே ஏகபோகமாக இருந்த பல செயல்கள், இனி ‘இயந்திர மனிதர்’களாலும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படப்போகிறது. வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதிய வெட்டு ஆகியவை இனி அதிகமாகப்போகிறது. மனிதவளத் துறை மேலாளர்களுக்கு இது முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.
நடுத்தர வயதினருடைய சிக்கல்கள் தீவிர மடையும். சமூக பொருளாதார நடைமுறைகள் பாதிப்படையப்போகின்றன. சமூக அடுக்கில் மேலே இருக்கும் ஒருசதவீதமான பெரும் பணக்காரர்கள் செல்வத்தின் பெரும் பகுதியை இன்னும் அதிகமாகக் கைப்பற்றப்போகின்றனர். எஞ்சிய 99வீதமான மக்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை, வருவாயை இழக்கப்போகின்றனர். அதுமட்டுமல்லாமல், இயந்திர மனிதர்கள் தரும் பொருட்களை, சேவைகளைப் பணம் செலுத்தி நுகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படப்போகின்றனர். அவர்களுக்கு வருவாய் குறைவதுடன், கிடைக்கும் வருவாயும் செலவழியப்போகிறது. அதே சமயம், நாடுகளின் ‘ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு’ (ஜி.டி.பி.) அதிகமாகப்போகிறது.
இவற்றிலிருந்து ஆசியான் நாடுகள் எவ்வாறு தம்மைச் சுதாகரித்துக்கொள்ளப் போகின்றன. இதனைப்பற்றிக் கவனம் செலுத்திய ஆசியான் தலைவர்கள் எதிர்காலத் திட்டமிடலை ஒன்றுபட்டு வகுக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
நான்காவது கைத்தொழில் புரட்சியின் தொழில்நுட்பங்கள்
செயற்கை மதிநுட்பமும் உபகரண கற்றலும்.
ரோபோக்களும் தன்னியக்க செயற்பாடுகளும்.
3டி அச்சுப்பணிகள்
ட்றோன் போன்ற தானியங்கி வாகனங்கள்
மரபணு தொழில்நுட்பங்கள் “இன்னும் பல”
நான்காவது தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் மாற்றக்கூடியது. வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில், வர்த்தக முறைமை, கைத்தொழில் கட்டமைப்புகள், சமூகத்தொடர்புகள், ஆட்சி முறைமைகள் போன்றவற்றில் மாத்திரமன்றி மானுடக் கருதியிலையும் மாற்றியமைக்கக்கூடியது.
1878இல் அறிமுகமான நிலையான தொலைபேசி இணைப்புகள் 100 மில்லியன் மக்களைச் சென்றடைய 75 ஆண்டுகள் சென்றன. 1979இல் அறிமுகமான கைப்பேசிகள் 16 ஆண்டுகளில் 100 மில்லியன் பாவனையாளர்களைச் சென்றடைந்தன. 1990இல் ஆரம்பிக்கப்பட்ட இணைய வசதி, ஆறே ஆண்டுகளில் 100 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது. 2008இல் அறிமுகமான செயலிகள் வெறும் மூன்றே ஆண்டுகளில் 100மில்லியன் பாவனையாளர்களைச் சென்றடைந்தன. அதேநேரம், மூன்றாவது தொழில் புரட்சியில் உருவான கணனிக் கருவிகள் (chips) கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு ரில்லியன் தடவை அதிகரித்திருக்கிறது. இதனால், இயந்திரத்தின் உதவியுடனான கற்றல் அதிகரித்திருக்கிறது. ஆகவே, நான்காவது கைத்தொழில் புரட்சி தீவிரமான தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்று எதிர்வுகூறப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளின் சிந்தனையும் செயலும் எதிர்காலச் சவால்களைப் பற்றியதாக இருக்கும்போது இலங்கை மாத்திரம் அதிலிருந்து விலகி, இன்னமும் பழைமையைப் பற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதையே வியட்நாம் உலகப் பொருளாதார மாநாடு உணர்த்தியிருக்கிறது. (மிகுதி அடுத்த வாரம்)