பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சகல ரயில் சேவைகளும் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 முதல் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ரயில் சேவை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் பஸ் உரிமைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அந்த சங்கங்கள் அறிவித்துள்ளன. இது இவ்வாறிருக்க திட்டமிட்டபடி நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச, பகுதி அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த 12ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்தே ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமன் ரத்னபிரிய அறிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல், குழுக்களை அமைத்து பிரதமர் காலம் தாழ்த்துவதாக சமன் ரத்னபிரிய தெரிவித்தார். இதேவேளை, சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்கம், இன்று காலை 7 மணிமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 19ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாகவும் அச்சங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.