(புருஜோத்தமன் தங்கமயில்)
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதைத் தேர்தல் அரசியலுக்கான ஒரு பிரபலமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் நம்பின. அப்போது, கூட்டமைப்புக்குள் பெரும் அதிருப்தியோடு அல்லாடிக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், பேரவையைத் தனக்கான புதிய போக்கிடமாகவே பார்த்தது. ஆனாலும், தேர்தல் அரசியலை மய்யப்படுத்திய எதிர்பார்ப்புகளோ, செயற்பாடுகளோ தங்களிடத்தில் இல்லை என்று, பேரவையில் அங்கம் வகிக்கும் கல்வியாளர்களும் வைத்தியர்களும் வெளிப்படுத்தியிருந்தனர்.இதை வாக்குறுதியாக வழங்கியதன் பேரிலேயே, தான் பேரவையின் (இணைத்)தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். இதை, அவர் பல தருணங்களிலும் மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கவும் செய்தார்.
எனினும், உள்நோக்கங்களைக் காலம், மெல்லமெல்ல வெளிப்படுத்திவிடும்; அதுதான், இப்போது பேரவை விடயத்திலும் நிகழ்ந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில், தன்னைப் பெரும் அமுக்கக் குழுவாகக் காட்டிக்கொள்ள முயன்ற பேரவை, விக்னேஸ்வரனின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளை அறிவிக்கும் கூட்டத்தை, இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
ஈழத்தமிழர் அரசியல் என்பதே, அதிகாரங்களில் இருப்பவர்களின் கைகளில்தான் அதிக தருணங்களில் இருந்திருக்கின்றது. ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா காலம் தொட்டு, தலைவர் பிரபாகரனுக்குப் பின்னரான இரா. சம்பந்தனின் காலத்திலும் அதுதான் நிகழ்ந்து வருகின்றது.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் மேல்நிலையில் நிற்பதற்கு, மக்களின் அங்கிகாரத்தை ஏதோவொரு வழியில் அடைந்தாக வேண்டும். அதை அடைவதற்கான வழி, தற்போதைக்குத் தேர்தல் மட்டுமே. அப்படியான கட்டத்தில், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அரசியலை முழுமையாக ஏற்று, தமிழ்த் தேசியத் தலைமை என்கிற கட்டத்தை அடைவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. அது சரியா, பிழையா என்பது விவாதத்துக்குரியது. ஆனாலும், வாய்ப்புகள் இல்லை என்பதே உண்மை.
அப்படிப்பட்ட சூழலில், நாளை வியாழக்கிழமையோடு, வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வருகின்றது. அது, முதலமைச்சர் என்கிற அடையாளத்தை விக்னேஸ்வரனிடம் இருந்து விலக்கிவிடும். அவர், முன்னாள் முதலமைச்சர் ஆகிவிடுவார்.
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்து முதலமைச்சராக்கிய சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் தரப்போடு முரண்பட்டு, கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கத் துணிந்த போதிலும், முதலமைச்சர் பதவியைவிட்டு விலகுவது சார்ந்து விக்னேஸ்வரன் என்றைக்குமே சிந்தித்ததில்லை. அவரைப் பதவி நீக்குவதற்குத் தமிழரசுக் கட்சி முயன்றபோதிலும் அதைத் தாண்டியும் நின்றார்.
13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவான மாகாண சபையும் அதன் முதலமைச்சர் பதவியும் அதிகாரங்கள் அற்றவைதான். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலிலும் இராஜதந்திர மட்டத்திலும் ‘வடக்கின் முதலமைச்சர்’ என்கிற அங்கிகாரத்தினூடு, விக்னேஸ்வரன் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் கனதியானது.
கடந்த சில மாதங்களாகப் பேரவையின் முக்கியஸ்தர்கள், அரசியல் பத்தியாளர்கள், சில செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு இடையே, தொடர் கலந்துரையாடல்கள், முதலமைச்சர் வாசஸ்தலம் தொடங்கி, முக்கியஸ்தர்கள் இல்லங்கள் வரை மாறிமாறி இடம்பெற்று வந்தன.
மக்கள் பேரியக்க அரசியல் பற்றி, முதலமைச்சரும் பேரவையினரும் அரசியல் பத்தியாளர்களும் அடிக்கடி பேசி வந்தாலும், தொடர் உரையாடல்களில் அதிகம் இடம்பெற்றது என்னவோ, விக்னேஸ்வரனை முன்னிறுத்திய, தேர்தல் அரசியல் அரங்குக்கான தயார்படுத்தல்களே ஆகும்.
கூட்டமைப்புக்கு எதிரான அணியில் இருந்தாலும் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டுள்ள முன்னணியையும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பையும் எவ்வாறு கையாண்டு, ஓர் அணிக்குள் இணைப்பது, அதில், விக்னேஸ்வரனுக்கு அடுத்த நிலையில் யார் முக்கியத்துவம் பெறுவது என்கிற சாரப்பட, உரையாடல்களை நடத்துவதில் அந்தந்தத் தரப்புகளுக்கு விசுவாசமானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இறுதி மோதல்களுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழலில், அமுக்கக் குழுவாகத் தன்னை கட்டியெழுப்ப முனைந்த சிவில் சமூக அமையமோ, அதன் பின்னராக வந்த பேரவையாலோ, மக்களிடம் போதிய அங்கிகாரத்தைப்பெற முடியவில்லை.
இதைச் சிவில் சமூக அமையத்துக்குள்ளும் பின்னர், பேரவை என்ற அடையாளத்துக்கு உள்ளும் வந்துவிட்ட கல்வியாளர்களாலும் வைத்தியர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுசார்ந்த ‘வெப்பிசாரங்களை’ அடிக்கடி வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
பிரமுகர் அமைப்புகளாக இருக்கும் சிவில் சமூக அமையமோ, பேரவையோ எளிய உரையாடல்களை, மக்களோடு எந்தவொரு தருணத்திலும் நடத்தவில்லை. அது, அவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தி வந்தது.
அப்படியான கட்டத்தில்தான், ‘எழுக தமிழ்’ மூலம் பேரவையை மக்களிடம் ஓரளவுக்கு கொண்டு சேர்க்க, பேரவைக்குள் இருக்கும் அரசியல் கட்சிகள் முயன்றன; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன. அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டுதான், பேரவை இன்றைக்குத் தன்னுடைய அடுத்த கட்டத்தை அடைவதற்கு முயற்சிக்கின்றது.
விக்னேஸ்வரனோ, பேரவையோ தேர்தல் அரசியலை முற்றுமுழுதாகப் புறந்தள்ளிக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட முடியாது என்கிற நிலையில், தேர்தல் அரசியலுக்குள் முகிழ்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட பின்னர், அமுக்கக் குழுக்கள் என்கிற கௌரவமான அடையாளத்தை எந்தத் தரப்பினாலும் வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படிப்பட்ட சூழலில், தேர்தல் அரசியலில் ஏற்படுகின்ற எல்லாவிதமான அடிதடிகளுக்குள்ளும் குத்துவெட்டுகளுக்குள்ளும் பேரவையும் நின்றாக வேண்டும். அப்போது, சட்டைகளில் வியர்வை படாத, மேல்மட்ட அரசியலைச் செய்ய முடியாது. மக்கள் பேரியக்கம் என்கிற மேம்போக்கான உரையாடல்களை, ஊடகங்களில் நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. இறங்கி நின்று மல்லுக்கட்டியாக வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலின் பலம் என்பது, அனைத்துத் தரப்புகளும் ஓரணியில் நிற்பதினூடுதான் சாத்தியப்பட முடியும் என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது. கூட்டமைப்பு, அதன்போக்கில்தான் தனக்கான அங்கிகாரத்தை, மக்களிடம் கடந்த காலங்களில் கோரியும் வந்திருக்கின்றது.
ஆனால், தேர்தல் அரசியலில் இருக்கும் தரப்புகளை (கூட்டமைப்பை) வழிப்படுத்துவதற்காக அமுக்கக் குழுக்களாகத் தங்களை நிலைநிறுத்த எத்தனித்தவர்கள், அந்தக் கட்டத்திலிருந்து தேர்தல் அரசியலுக்குள் நுழையும் போது, ஓரணிக் கோசத்தையோ, மக்கள் பேரியக்க கோசத்தையோ முன்வைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தற்போது எப்படிக் கூட்டமைப்பு, முன்னணி, கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பிரிந்துநின்று மோதிக்கொள்கிறார்களோ, அதன் இன்னொரு கட்டத்தை அரங்கேற்றும். தேர்தல்களை எதிர்நோக்கிய பேச்சுகளும், ஊடக உரையாடலும் மேலெழும். பத்தியாளர்கள் கன்னை பிரித்துக் கொண்டு மல்லுக்கட்டுவார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலுக்குள் தொடர்ந்தும் நிலைத்திருப்பதன் மூலமும், பேரவை தேர்தல் அரசியலுக்குள் நேரடியாக நுழைவதன் மூலமும் சில நன்மைகளும் உண்டு.
அது, கடந்த காலங்களில் ஏக நிலையில் இருந்த கூட்டமைப்புக்கு எதிராக, ஓரளவுக்கு பலமான கூட்டணியை உருவாக்கும். அது, தமிழ் மக்களை நோக்கி மாற்றுத் தெரிவுகள் பற்றிய எண்ணத்தை இருக்கின்ற அளவிலும் பார்க்க சிறிதளவேனும் அதிகப்படுத்தும். அதனூடு கூட்டமைப்பு (குறிப்பாக, தமிழரசுக் கட்சி) மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.
ஆனாலும், இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய விடயமொன்று உண்டு. விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு எவ்வளவு வெளிப்பூச்சுகள் பூசினாலும், பேரவை தேர்தல் அரசியலுக்கு வந்துவிடும். இன்றைக்கு முதலமைச்சர் என்ன தோரணையில் உரையாற்றினாலும், எதிர்காலப் போக்கு, தேர்தல்கள் சார்ந்ததாகவே இருக்கும்.
ஆனால், அந்த எல்லாவிதமான நடவடிக்கைகளும், யாழ்ப்பாணத்துக்குள், அதிக பட்சமாக வடக்குக்குள் மாத்திரமே முடிந்து போகும் சூழலே உண்டு. கிழக்கு மாகாணத்தில் ஆளுமை செலுத்துவதற்கான எந்தக் கட்டமும் காணப்படவில்லை என்பதுதான், பேரவையின் தேர்தல் அரசியல் பிரவேசத்தில் உள்ள பெரும் குறைபாடு.
அது, ஒரு பிரதேச அரசியல் கட்சியை ஒத்த நிலையைப் பேரவை மீது உருவாக்கிவிடும். அதைக் கடப்பது சார்ந்து தொடர் கூட்டங்களில் உரையாடப்பட்டமைக்கான காட்சிகளைக் காண முடியவில்லை. ஆனாலும், தேர்தல் அரசியலுக்குள் நேரடியாக நுழையும் பேரவையை, இந்தப் பத்தியாளர் வரவேற்கிறார்; வாழ்த்துகிறார்.