(க. அகரன்)
இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
வடக்கு மாகாண சபை நாளையுடன் (23) நிறைவுறும் நிலையில், அதனூடாக அரசியல் பிரவேசம் செய்த பலரும், இன்று ஆளுக்கோர் அரசியல் களத்தைப் புலம்பெயர் தமிழர்களின் பலத்தோடு மாத்திரம் அமைக்க முனைந்து வருவதானது, எவ்வகையில் ஆரோக்கிமான பாதையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்வர்.
புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தில் அதிலும் குறிப்பாக தமிழர் அரசியலில், தமக்கான சாதக சூழலை ஏற்படுத்த முனையும் நிலையிலேயே, இலங்கை அரசியலின் செல்நெறியை இந்தியா நிர்ணயித்து வருகின்றது. இது இலங்கைக்கும் சரி, போர்ப் பாதிப்புகளால் இன்னல்களைச் சந்தித்த தமிழர் தரப்புக்கும் சரி ஆரோக்கியமானதல்ல.
இந்நிலையிலேயே, நீண்ட கால அரசியல் செயற்பாட்டை கொண்டதும், தமிழர்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழரசுக் கட்சியை முதன்மையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெறுமனே நிபந்தனையற்ற ஆதரவினூடாக அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வருவதானது, எதைச் சாதிக்கப் போகிறது என்பது கேள்வியே.
இன்று, அரசியல் கைதிகளின் விடயம் பூதாகரமாகியுள்ள நிலையில், அந்த விடயத்திலும் கூட்டமைப்பு, தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறியுள்ளதுடன், காலம் கடத்தும் செயற்பாட்டையும் முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்குமப்பால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் விடயம், அரசியல் தீர்வு என்பவற்றுக்கான தீர்வைப் பெற வேண்டிய நிலையில், அரசாங்கத்துக்கான ஆதரவைக் கூட்டமைப்புத் தளர்த்திக்கொள்ள முடியுமா? எதிர்வரும் நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பாதீட்டுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவே போகின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இச்சூழலில், இந்த வருடத்தில் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் போது, இரண்டு கோடி ரூபாய் கைமாறப்பட்டது என்கிற சர்ச்சை, காலம் கடந்த நிலையில், அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது என்று, கூட்டமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, அது நம்பிக்கை இல்லாப் பிரரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மட்டும், தனித்து வழங்கப்பட்டதல்ல.
தொடர்ச்சியாக, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கும் பட்சத்தில், மறைமுகமான நிதிப்பங்களிப்புகள் கிடைக்கும் என்பதற்கான நல்லெண்ண வெளிப்பாடாகவே, அதைப் பார்க்கவேண்டும். எனவே, தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு உள்ள அதிருப்தியான தன்மைகளைக் கலைவதற்கு, அபிவிருத்தி என்ற தளத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இதனால், பாதீட்டின் ஊடாக வரும் சில அபிவிருத்தி திட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனித்துச் செயற்படமுடியாது என்பது உண்மைதான். எனவே பாதீட்டுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தே தீரும் என்பது அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாள்களாக வெளிப்படுத்திவரும் கருத்துகளில் இருந்து உணரமுடிகின்றது.
இதற்கான வாய்மூல உத்தரவாதமொன்றும், ஐ. தே. கவின் முக்கியஸ்தரான எரான் விக்கிரமரட்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரால் வழங்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரொருவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழலிலேயே, அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியில் பரந்துள்ள பல்வேறுபட்ட விடயங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தைப் புறந்தள்ளித் தாம் செயற்படுவது, சாத்தியமற்ற செயற்பாடு என்ற கருத்தைக் கூட்டமைப்பு வெளியிடும் என்பதும் பலருக்கும் தெரிந்துள்ளது.
இருந்தபோதும், பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தமோ, பொது அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களின் ஊடான அழுத்தங்களாலோ பாதீடு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித தாக்கத்தையும் செலுத்த முடியாது.
இந்தக் குழப்பகரமான நிலையிலேயே, வடக்கு மாகாணசபை கலைவதோடு, அடுத்த கட்டத் தேர்தலுக்கான முனைப்புகளும் தொடங்கியுள்ளன. அந்தத் தொடக்கம், வெறுமனே கருத்தியல் மோதல்களாக அன்றி, அரசியல் பிறழ்வுகள் ஏற்படும் நிலைக்கு, வழிசமைத்துள்ளமையே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வகையான அச்சங்களைத் தோற்றுவித்துள்ளது.
மாவை சேனாதிராஜா, அடுத்த மாகாணசபைத்தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையில், அத்தளம் நோக்கிய, அவரது முனைப்புகளில், இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாட்டை, மேடை மேடையாக விமர்சித்து வரும் நிலை காணப்படுகிறது.
இந்த இடத்தில், சில விடயங்களை ஞாபகப்படுத்தவேண்டிய தேவையும் இப்பத்திக்கு உள்ளது. அதாவது 2013 ஆம் ஆண்டு, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முனைப்புகள் ஆரம்பித்திருந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, பல அரசியல் ஆர்வலர்களும் நேரடியாகவும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும், விக்னேஸ்வரன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கான அரசியல் தலைவராக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எடுத்துரைத்திருந்த போதிலும், ‘தலைப்பாகை கட்டியவனெல்லாம் தலைவன், அவன் வாக்கு நிலையானது’ என்ற எண்ணப்பாட்டுடன் விக்னேஸ்வரனை முதலமைச்சராக நிறுத்தி, தாமே வெற்றி பெற வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஐந்து வருடங்கள் கழித்து, தமது தீர்மானத்தைப் பெரும் பாவமாக கருதுகின்றேன் என்ற கருத்து, அரசியல் ஆசையின் வெளிப்பாடா, தமிழ் மக்களுக்கு எதையும் செய்து முடிக்காமல் போய்விட்டதே என்கின்ற வேதனையின் வெளிப்பாடா என்பது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டிய நிலைமையில் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கூட்டமைப்பின் அடுத்த தலைமை, மாவை சேனாதிராஜாவாக, மறைமுகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ. தே.கவும் சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது என்ற அபாயச்சங்கை, செல்வம் அடைக்கலநாதன் ஊதியுள்ளார்.
இந்த அபாயச்சங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழ் மக்களால் ஊதிக்காட்டப்பட்ட போதிலும், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத நிலையிலேயே, தற்போது, செல்வம் அடைக்கலநாதனுக்கு அந்தச் சங்கை, ஊதி எச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
மாகாண சபையினூடாகத் தமது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய பலரும், தம்மை இன்று, நட்சத்திர அரசியல் புள்ளிகளாக எண்ணி, கட்சிகள் ஆரம்பிக்கும் படலமும் வடக்கில் அரங்கேறத்தொடங்கியுள்ளது.
அனந்தி சசிதரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற கட்சி ஏற்கெனவே, தெரிவித்தது போன்று, புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடு, ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அதன் நோக்கம், அதன் மறைமுகச் செயற்பாடுகள் எதைச் சாதிக்க முனையப்போகின்றது என்பது, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் ஐயமும் கலந்த கலவையாகவே உருப்பெற்றுள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்ஐ பொறுத்தவரையில், எப்போது முதலமைச்சர் புதிய கட்சியை ஆரம்பிப்பார், அதனுடன் தாமும் ஒட்டிப் பயணிக்க எண்ணியுள்ள நிலையில், அனந்தியின் கட்சி அறிவிப்பு, பெரும் குழப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசாங்கத்தில் உள்ள பலருக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்பான விடயங்களால், ஏற்படப்போகும் மாற்றங்கள் அல்லது கட்சித்தாவல்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். மஹிந்தவுடன் மைத்திரி அணி கூட்டுசேர்ந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பம் கொண்டுள்ள நிலையில், ஐ. தே. க, தனது ஆட்சியை நிலை நிறுத்தவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் சிலவற்றுக்கு இணங்கி, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள, ஐ.தே.க முற்படும் என்பது, சந்தேகத்துக்கு இடமின்றிய நிலையில், அந்த இணக்கப்பாடு அரசியல் கைதிகள் விடயத்தில் சாதகமான பதிலை தரும் என எதிர்பார்க்க முடியாது.
வடக்கு மாகாணசபை, தனது ஆட்சியை நிறைவு செய்து கலையப்போகும் நிலையில், வடக்கு பிரதேசத்தில் செய்து முடித்த விடயங்களை உள்ளடக்கி பட்டியலொன்றை முன்வைக்கும் போது, அது தமிழ்த் தலைமைகளுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.
எதிர்பார்ப்புகளுடன் அமைக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, இறுதியில் அதன் தவிசாளராலேயே “வீணடித்துவிட்டோம்” என்று ஆதங்கப்படும் நிலையை தோற்றுவித்துள்ளதெனில் தமிழ்த் தலைமைகளின் ஆளுமையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவே உணரவைத்துள்ளது.
யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து, மீள கட்டியெழும்ப வேண்டிய இனத்தின் ஒரு தளம், ஆரோக்கியமற்றதாகக் காணப்படும் நிலையில், அதை முண்டு கொடுத்து நிமிர்த்தவேண்டிய தமிழ்த் தலைமைகள், தமக்குச் சாதகமாகத் தப்பித்துக்கொண்டமையும் அத்தருணத்திலேயே பெரும்பான்மையின ஆட்சி அதிகாரத்துக்கு முண்டுகொடுத்து அதைக் காத்துவருவதும் எவ்வகையில் ஏற்பது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்துள்ளது.
எனவே, இவ்வாறான அரசியல் தலைமைகளுக்கு மாறாக மாற்றுத் தலைமையொன்றின் தேவை தமிழர் தரப்பில் உணரப்பட்டாலும் கூட, அது தற்போது கட்சி ஆரம்பிக்கும் தலைவர்களால் சாதிக்கமுடியுமா என்கின்ற கேள்வி நிறையவே உள்ளது.
வடக்கு மாகாணசபை உறுப்பினர், ப. சத்தியலிங்கம் நிகழ்வொன்றில் கருத்துரைக்கும்போது, “சசிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு பெண் செயலாளர் நாயகமாக இருக்கின்ற முதலாவது கட்சி என்கின்ற பெருமை அவருக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கிறதோ, இல்லையோ அதனூடாகத் தமிழர்களுக்குப் பெருமை கிடைக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஐயப்பாடு, பலருக்கு உள்ள நிலையில், வரும் மாகாணசபைத் தேர்தல், வடக்கில் கொதி நிலையை உருவாக்கும் என்பதற்கப்பால், பெரும் மோதல்களையும் உருவாக்கவும் வழிசமைக்கும்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவில் சமூகத்தின் நிலைப்பாட்டை உதாசீனம் செய்து, கூட்டமைப்பில் இருந்து வெளியேறி, உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கூட்டணியுடன் கைகோர்த்து, அவமானங்களைச் சந்தித்ததோ, அதேபோன்றதான கசப்பான அனுபவத்தை, அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்காமல், பாதீட்டுத்திட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் அறிந்துகொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிலைநிறுத்தி, முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைப்பாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே, தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினூடாக அரசாங்கத்தைக் காத்துக்கொள்ளமுடியுமாக இருந்தாலும், தமிழ் மக்களின் வாக்கு என்ற தளத்தில், பாரிய சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இதன் காரணமாக, வடக்கு மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் தமிழர் தரப்புக் கட்சிகளாகத் தம்மைப் பிரகடனப்படுத்தி உள்ளவர்களும் பிரகடனப்படுத்த முனைபவர்களும் தமக்குள் மோதுவதோடு மாத்திரமின்றி, தமது குப்பைகளைத் தாமே கிளறி ஆய்வு செய்யும் நிலையில், தேசிய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, தமிழர்களின் விருப்பு வெறுப்புகளைக் குழி தோண்டிப் புதைக்க முனையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
எனவே, எதிர்க்கால தமிழர் நிலைப்பாட்டைச் சிந்தித்து, ஓரணியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படாத வரையில், தமிழர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதென்பது, கைக்கெட்டாத நிலையாகவே போகும். அது, ‘கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக மாறும்’ என்பதைக் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, அரசியல்வாதிகள் உணரத் தலைப்பட வேண்டும்.