சட்ட ஆய்வாளரான சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று பதவி விலகுவதன் மூலம் , அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கலாம். ஆனபோதும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுவராக இருந்தால் அவரை அந்த பதவியிலிருந்து எப்படி நீக்குவது என அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.
அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடாக இது இருக்கின்றது. எவ்வாறாயினும் பாராளுமன்ற முறைமையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கமைய பிரதமர் ஒருவரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்க முடியும்.
ஆனால் ஜனாதிபதிக்கு தனது எண்ணத்தின்படி பிரதமரை நீக்க முடியாது. அவர் பாராளுமன்றத்திடம் கேட்டு அறுதிப் பெரும்பான்மையானவர்கள் யாரை பெயர் குறிப்பிடுகின்றார்களோ அவரை நியமிக்க முடியும்.
இதேவேளை தற்போது இலங்கையில் தேசிய அரசாங்கம் என்ற ஒன்றும் கிடையாது. தேசிய அரசாங்கம் தொடர்பான பிரதான கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளது.
இதன்படி புரிந்துணர்வு ஒப்பந்தமோ அல்லது தேசிய அரசாங்கமோ இன்றி அமைச்சரவைக்கோ அல்லது பிரதமருக்கோ இருக்க முடியாது. அவை சட்டத்திற்கு விரோதமானதே.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படவும் இல்லை , புதிய ஒப்பந்தமும் செய்துக்கொள்ளப்படவும் இல்லை.
இதனால் அமைச்சரவை கலைய வேண்டும் என்பதுடன் பிரதமருக்கும் பதவியில் இருப்பதற்கான அதிகாரமும் கிடையாது.
இவ்வாறான நிலையில் அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோரால் எடுக்கும் தீர்மானங்கள் செல்லுபடியற்றதே. என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மேனக ஹரன்கஹ இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
19ஆவது திருத்ததின் ஊடாக இதற்கு முன்னர் இருந்ததையும் பார்க்க பிரதமருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி பிரதமரை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்ற போதும் பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கென தனியான அதிகாரங்கள் கிடையாது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் பிரதமரை எழுத்து மூலம் அறிவித்து ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியும்.
ஆனால் 19ஆவது திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் எண்ணப்படி பிரதமரை நீக்க முடியாது. பிரதமர் விரும்பி பதவி விலக வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் அவர் பதவியில் தொடரும் வேளையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஆனபோதும் இவ்வாறான பிரதமர் தலைமை வகிக்கும் அரசாங்கம் விழக் கூடிய சாத்தியங்கள் இருக்குமாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அதனை நிறைவேற்றி பிரதமரை பதவி விலக செய்வதற்கு முடியுமான நிலைமையை ஏற்படுத்தலாம். இவற்றை தவிற அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் அவரை நீக்க முடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.