சிரிய அகதிகளை உள்வாங்குதல்……

(சாகரன்)

சிரிய அகதிகளை உள்வாங்குதல் என்பதில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க முதலாளித்துவ நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதுபோல் தோன்றுகின்றது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவுவது போல் தோன்றினாலும் விமான நிலையங்களில் வந்திறங்கும் சிரிய மக்களையும் அவர்கள் கொண்டு வரும் பொதிகளையும் பார்க்கும் போது இவர்கள்; சிரியாவை விட்டு இடம்பெயர்ந்து இன்னும் ஒரு நாட்டில் வசதியாக வாழ்ந்து விட்டு இன்னும் ஒரு வசதியான நாட்டிற்கு….. அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயருவது போல் தோற்றம் அளிக்கின்றது. உண்மையான யுத்தத்தினால்; பாதிப்பிற்குள்ளான அகதிகள் ஆண்டாண்டு காலமாக அகதி முகாம்களில் ‘வாட’ மேற்கூறியவர்களை பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை ‘தத்தெடுத்தல்’ விளையாட்டில் இந்த நாடுகளுக்கு விமானங்களில் கொண்டுவந்து இறக்கி தமது மனிதாபிமானங்களை? நிரூபிக்க முயலுவது தெரிகின்றது. இதற்கான பிரச்சார முன்னெடுப்புக்களை இவ் அகதிகள் இந்த நாடுகளுக்கு வந்திறங்க முன்பும், பின்பும் செய்துவரும் வேடிக்கைகள் எம்மால் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இதில் இன்னொருவிடயமும் அறிய முடிகின்றது, அது இவ் வகையாக பொறுப்பெடுக்கப்படும் அகதிகளும் ஒருவகையில் வடிகட்டப்பட்ட பின்பே தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த வடிகட்டலில் குலமும், மதமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. யுத்ததில் பாதிக்கப்பட்ட யாவரும் அகதிகள் என்றாலும் யாரை முதன்மைப்படுத்தல் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அகதிகளை உருவாக்கும் யுத்தத்தை நிறுத்துவதே இதற்கான சரியான நிரந்தரத் தீர்வும் ஆகும். அகதிகளை ஏற்பவர்களே யுத்தத்தையும் நடாத்துகின்றனர் என்பது இவர்களின் போலியான மனிதாபிமான முகமூடியை கிளித்தெறியப் போதுமானதாகும்.