மக்களாலேயே தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கேட்டுக்கொண்டதாலேயே தான் இன்று பிரதிஅமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாகவும் கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து, இன்று (17) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்த போது என்ன செய்தேன் என்பது, எனக்கு வாக்களித்த எனது ஊர் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன்.
“வெறும் வெத்துப் பேச்சுகளையும் பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம்மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க எனக்கு விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது.
“அந்த குற்ற உணர்வுடன் கூட்டமைப்பை சொல்லி மக்கள் முன்சென்று வாக்கு கேட்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில், நான் எப்படி கூட்டமைப்போடு இணைய விரும்புவேன்.
“ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு இணைய முற்படுவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.
மேலும், தமிழ் மக்களின் பிரச்சினையை பிச்சைக்காரியின் புண் போல் வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துவது மனச்சாட்சிக்குத் துரோகமானது என்பதை மூன்றரை வருட காலத்துக்குள் உணர்த்திய கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
“மிகப்பெரும் உத்தமர்களாக நடிப்பவர்களின் முகத்திரையை மிகவிரைவில் கிழிக்கவுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.