வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்படவேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற போது, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு இல்லையென்றுக் கூறும் நிபுணர் குழுவின் அறிக்கையானது, நோர்தன் பவர் நிறுவனத்தை குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க வைப்பதற்கான முயற்சியாத் தோன்றுகின்றது. இந்த அறிக்கையை வைத்து, நொர்தன் பவர் நிறுவனம் தங்கள் மீது நீதிமன்றத்தில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிடவேண்டியது அவசியம்’ என்றார்.