கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதி இடமான டெய்ர் எஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இரண்டு நாட்களாக நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகளின் படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது. ஈராக்கிய எல்லையிலுள்ள கிழக்கு மாகாணமான டெய் எஸ்ஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை வெளியேற்றுவதற்காக சிரிய ஜனநாயகப் படைகள் போரிடுகின்றன.
இந்நிலையில், மூன்று வெவ்வேறு தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு நடத்தியதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அல்-பஹ்ரா, கஹரஞி, வர்த்தக ரீதியாக செயற்பாட்டிலுள்ளதுடன் சிரிய ஜனநாயகப் படைகளின் நிலையொன்றையும் கொண்ட அல்-தனாக் எண்ணெய் வயலுக்கு அருகிலுள்ள பகுதியொன்றை தாக்குதல்கள் இலக்கு வைத்ததாகக் கூறியுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், குறித்த மூன்று நிலைகளிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் தொடர் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதை சிரிய ஜனநாயகப் படைகளின் பேச்சாளர் முஸ்தபா பாலி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சிரிய ஜனநாயகப் படைகளின் போராளிகள் 29 பேர் நேற்று மட்டும் கொல்லப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாகக் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 47ஆகக் காணப்படுவதாகத் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ள நிலையில், இதே காலத்தில் தரை, விமானத் தாக்குதல்களில் 39 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இதேவேளை, வடமேற்கு மாகாணமான இட்லிப்பிலுள்ள எதிரணியின் இறுதி நிலையமொன்றில் திட்டமிடப்பட்ட மோதல் தவிர்ப்பு பகுதியொன்றில் சிரிய அரசாங்கத்தின் ஷெல் தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் நேற்று கொல்லப்பட்டதாக மனித உருமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதில், கொல்லப்பட்டவர்களில் பாடசாலையொன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் ஆசிரியையொருவரும் பாடசாலைச் சிறுவர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக றபி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவுக்கு அருகிலுள்ள பகுதியொன்றில் எதிரணி நச்சு வாயுத் தாக்குதலை நேற்று நடத்தியதாக சிரிய அரச ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.