கே. ஒக்ேடாபர் 26ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை மேற்கொண்ட போது நிலைமை இந்தளவு சிக்கலாகும் என்று எப்போதா வது நினைத்தீர்களா?
ப. இல்லை. ஒருபோதும் இல்லை. அப்படி சிந்திப்பதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. மக்கள் அதற்கான பொறுப்பினை ஏற்றுச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்ைகயில்தான் அந்த முடிவை எடுத்தேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே எனது முடிவு அமைந்திருந்தது.
கே. உங்களுடைய முடிவு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று நினைக்கின்றீர்களா, அல்லது உங்கள் முடிவை மீளச் சிந்தித்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால், உங்களது முடிவை மாற்றிக்ெகாள்வீர்களா?
ப. ஒருபோதும் இல்லை. எனது முடிவை அரசியலமைப்புக்கு முரணானதாக நான் கருதவில்லை.
கே. சரித்திர புத்தகங்களில் நீங்கள் எவ்வாறு இடம்பெறுவீர்கள் அல்லது நினைவு கூரப்படுவீர் கள் என்று நினைக்கிறீர்கள்?
ப. அதுபற்றி என்னால் எந்தக் கருத்தையும் கூறமுடியாது. நான் எவ்வாறு நினைவு கூரப்படுவேன் என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும். உலகில் எந்தவொரு இடத்திலும் சரித்திரம் சரியாக பதிவுசெய்துள்ளது என்று நான் நம்பவில்லை என்பதையும் நான் இங்குக் குறிப்பிடவேண்டும். இந்த சம்பவங்களைப் பதிவுசெய்பவர் மற்றும் அவரது கண்ணோட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே பெரும்பாலும் இது அமைகின்றது. ஒரு சிலர் சரித்திரத்தை எவ்வாறு தாங்கள் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்தார்களோ அதுபோலக்கூட பதிவு செய்வார்கள்.
ஆனால், பெருமளவிலான சரித்திரவியலாளர்களுக்கு எந்தவொரு சரித்திரபூர்வ நிகழ்வுகளுடனும் நேரடித் தொடர்பு இல்லை. எமது அரசர்கள் மற்றும் சரித்திர பூர்வ ஆட்சியாளர்களைப் பற்றி எவரும் சரியாகப் பதிவு செய்யவில்லை. அதனை எழுதியவரின் கருத்து அல்லது கண்ணோட்டத்தை உட்புகுத்தியதாகவே அவைகள் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் பரணவிதான போன்ற ஒருவரை நீங்கள் எடுத்துக்கொண்டால் அவர் ஒரு விடயத்தை படித்தபின் அவரது கண்டுபிடிப்பை பொறுத்தே அவரது அறிக்கை அமையும்.
பொலன்னறுவையில் பராக்கிரம சமுத்திரத்துக்கு அருகில் உள்ள சிலை புலஸ்தி இசிவரயவினுடையது என்பது பேராசிரியர் பரணவிதானவின் கருத்து. ஆனால், அந்தச் சிலை பராக்கிராமபாகு மன்னனுடையது என்பது இன்னொரு சாராரின் கருத்து. எனவே சரித்திர பூர்வ நிகழ்வுகளிலும் நிச்சயத்தன்மை இல்லை.
கே. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிலவேளை பெரும்பான்மை ஆதரவைக் காண்பிக்கத் தவறிவிட்டால், உங்களது அடுத்த கட்ட நடவடிக்ைக என்னவாகவிருக் கும்?
ப. எந்தத் தரப்பும் பெரும்பான்மை ஆதரவைக் காண்பிக்க முடியும். காண்பிக்க இயலாத மற்றைய தரப்பு அதற்கேற்ப செயற்பட வேண்டும். அதேநேரம், பெரும்பான்மை இருக்கின்றது என்ற நம்பிக்ைகயைக் கொண்டுள்ள தரப்பு அரசாங்கமாக இருக்க வேண்டும். அது நான் தலையிடும் விடயமல்ல. யாருக்க பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றதோ அவர்கள் அரசாங்கமாகச் செயற்பட வேண்டும். பெரும்பான்மை இல்லாதவர்கள், கள நிலவரத்தைப் புரிந்துகொண்டு உரிய தீர்மானங்களை எடுத்து அதற்கேற்ப செயற்பட வேண்டும்.
கே. உங்களுடைய இந்த முடிவுக்கு முக்கிய காரணம், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளைத் துரத்துவதற்கு என்று சொல்லப்படுகிறது. எதிர்காலத்திலும் இந்த விடயத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்களா, நீங்கள் ஜனாதிபதியாக இருக்கின்றபோது ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் அரசாங்கத்திலிருந்தால், அவர்களை நீக்குவதற்கு நடவடிக்ைக எடுப்பீர்களா?
ப. இதுபற்றிப் பேசுவதற்கு இஃது ஒரு பெரிய தலைப்பு. 225 உறுப்பினர்களில் யார் ஊழல் செய்திருக்கிறார், யார் செய்யவில்லை என்று எனக்குத் தனித்தனியாகப் பிரித்தறிய முடியாது. மக்கள் வாக்களிக்கும்போது ஊழல்வாதிகளைத் தெரிவு செய்வதைத் தவிர்த்துக் ெகாள்ள வேண்டும். அதேபோன்று, தெரிவு செய்யப்பட்டு வருபவர்களும், ஏன் அவர்களை மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இஃது இலங்கைக்கு ஒரு சாபக்ேகடு மட்டுமல்ல ஒரு தீராத நோயாகவும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஊழலை முற்றாக ஒழித்துக்கட்டுவது சுலபமானது அல்ல. மக்களும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
கே. பிணைமுறி தொடர்பான விசாரணைகளும் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவ தும் ஏற்கனவே தாமதமாகியுள்ள நிலையில், இது தொடர்பில் உடனடியாக என்ன நடவடிக்ைகயை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
ப. இதுவிடயத்தில் ஏதாவது தாமதம் ஏற்பட்டதென்றால், அதற்கு ரணில் விக்கிரமசிங்கதான் பொறுப்பு. மத்திய வங்கி இழந்த பணத்தை மீட்பதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமே இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தின் சட்ட வல்லுநர்களும் சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரும் இணைந்து இதற்கான சட்டங்களை வகுத்துப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியபோதிலும், சுமார் நான்கரை மாதங்களாக அது சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த இறுதி வாரத்தில், என்னுடைய தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக அந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளப்பட்டது. எனினும், இரண்டே இரண்டு பேர் மட்டும் விவாதத்தில் கலந்துகொண்டார்கள். அதனால், மறு திகதி குறிப்பிடப்படாமல் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், முன்னைய அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வந்துவிடும் என்பதால்தான் அவ்வாறு காலவரையறையின்றி விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இதற்கு உரிய நடவடிக்ைக எடுக்கவும் இழக்கப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாது. முன்னாள் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
கே. 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க உங்களுக்குக் கடிதமொன்றை அனுப்பியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி விபரிப்பீர்களா?
ப.2015 ஜனவரி ஆறாந்திகதி அவரிடமிருந்து கோரிக்ைக வந்தது. முதல் நாள் (05) நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையவிருந்தன. இரண்டு விடயங்கள் அவரது கடிதத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. முதலாவது, நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அவரைப் பிரதமராக நிமிக்க வேண்டும் என்பது. இரண்டாவது, ஜனாதிபதிக்குள்ள கூடியளவு அதிகாரத்தை அவருக்கு மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் என்பது. அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றதும், அத்துரலியே ரத்தன தேரர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோரை அழைத்துச் சந்திப்பொன்றை நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், அவருக்குப் பிரதமர் பதவி வழங்குவதென்றும் ஆனால், அதிகாரங்களைக் கைமாற்றுவதில்லை என்றும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதுபற்றி அவருக்கும் பின்னர் அறிவித்தோம்.
கே. நாட்டு மக்களுக்கு வழங்கிய நல்லாட்சி வாக்குறுதிகளை வழங்கிவிட்டதாக நம்புகிறீர்களா, அதனை அடைந்துவிட்டதான மனத்திருப்தி உங்களுக்கு இருக்கின்றதா?
ப. நான்கு ஆண்டை நெருங்குகின்ற இந்தக் காலப்பகுதியில், நல்லாட்சி கருத்திட்டத்தின் விஞ்ஞாபனத்தில் உள்ள வாக்குறுதிகளில் 60% நிறைவேற்றியிருக்கின்றோம். இதில் சில இடங்களில் தவறுகள் நேர்ந்திருந்தபோதிலும், எம்மைப்போன்று எந்தவோர் அரசாங்கமும் செயற்படவில்லை. இதில் சில பின்னடைவுகளையும் சந்தித்திருக்கின்றோம். ஒரு வித்தியாசமான பிரதமர் இருந்திருந்தால், இதனைவிடப் பன்மடங்கை அடைந்திருக்க முடியும். முறையான பிரதமராக அல்லாமல், அவர் சில நடவடிக் ைககளுக்காக ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். ரணில் விக்கிரமசிங்க நாட்டின்மீது பற்றுள்ளவர் கிடையாது. அவரது நவ தாராளவாதம் நாட்டுக்கு மிகத் தீவிரமானதாகும்.
ரணசிங்க பிரேமதாச போன்ற தலைவர்கள் கட்டியெழுப்பிய கட்சியை அவர் அழித்துவிட்டார். அவர் நாட்டை அழித்ததுடன் நின்றுவிடவில்லை, அநேகமாக என்னையும் அழித்துவிட்டார். ஆனால், நான் என்னைக் காப்பாற்றிக்ெகாண்டேன்.
கே. நீங்கள் சொல்கிறீர்கள், முன்னாள் பிரதமர் நாட்டு நலன் கருதி எந்தத் தீர்மானத்தையும் எடுப்பதில்லை என்று. ஆனால், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்ைக போன்ற முக்கிய தீர்மானங்கள் தன்னிச்சையாகவன்றி முறையாக அமைச்சரவை அங்கீகாரத்துடன் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் உங்களால் அதனை நிறுத்தியிருக்க முடியாதா?
ப. எல்லாமே காகிதங்களில் சட்டபூர்வமாகவும் முறையாகவும்தான் இருக்கின்றன. ஆனால், நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து விலகிச் சென்றால் நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. எத்தனையோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்றன. அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்படுகின்றது. உதாரணமாக, வீதிக்குக் காப்பற் போடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கும். ஆனால், தரகுப் பணத்தைப் பெற்றுக்ெகாள்ள அனுமதி வழங்குவதில்லையே! வழமையாக காப்பற்றையும் போட்டுவிட்டுச் சட்டவிரோதமாகத் தரகுப் பணத்தையும் பெற்றுக்ெகாள்கிறார்கள். ஆனால், தரகுப் பணம் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை.
கே. எந்தச் சூழ்நிலையின் கீழும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். சில வேளை அவர் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியதாகவி ருந்தாலும் அவரைப் பிரதமராக நியமிக்கமாட்டீர்களா?
ப. இந்த நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் மாறமாட்டேன். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன். இது மாறாது. இன்று மட்டுமல்ல, நாளையும் அது நடக்காது. பெரும்பான்மையை நிரூபிப்பவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்று அரசியலமைப்பில் சொல்லப்படும் அதேநேரம், ஒருவர் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று ஜனாதிபதி நம்புவாராயின் அவரைப் பிரதமராக நியமிக்க முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, எனது நிலைப்பாட்டிலிருந்து நான் விலகமாட்டேன்.
கே. புதிய பிரதமர் பற்றியோ அரசாங்கம் பற்றியோ கருத்து கூறுவதிலிருந்து சர்வதேச சமூகம் தவிர்த்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திடமிருந்து நீங்கள் எதனைப் புரிந்துகொண்டுள்ளீர்கள்?
ப. இதுவரை சர்வதேச சமூகம் அநாவசியமாக எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. சுமார் எண்பதுக்கும் அதிகமான நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகிறோம். நான்கைந்து நாடுகள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எந்தவொரு நாடும் எம்மீது அழுத்தத்தையோ அச்சுறுத்தலையோ வெளிப்படுத்தவில்லை. இராஜதந்திர உறுவுகளைக் கொண்டுள்ள நாடுகளில் 90 வீதமான நாடுகள் தலையிடுவதையோ பக்கச் சார்பாக செயற்படுவதையோ தவிர்த்து வருகின்றன. அறிக்ைககளையும் கருத்துகளையும் வெளியிடுவது அவர்களின் இராஜதந்திர உரிமை. அதனை நாம் அச்சுறுத்தலாகக் கருதக் கூடாது. எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்.
கே. மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்த மறு கணமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கணிசமான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தைப் பெற்றுக்ெகாண்டார்கள். இஃது கட்சியில் ஒரு பிளவை ஏற்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?
ப. எங்களில் எவரும் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுக்ெகாள்ளவில்லை. அவர்களோடு ஏற்கனவே இணைந்திருந்தவர்கள்தான் அங்கத்துவத்தைப் பெற்றுக்ெகாண்டுள்ளார்கள். அந்த அணியில் இருந்தவர்களைத் தவிர வேறு எவரையும் அவர்களால் இணைத்துக்ெகாள்ள முடியவில்லை. இஃது ஒரு பெரிய பிரச்சினையல்ல. எந்தச் சிக்கலுமின்றி நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வோம். ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற மற்றைய கட்சிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நாங்கள் ஆராயமாட்டோம். அவர்களைப்போல் நாங்களும் எமது பிரச்சினையைத் தீர்த்துக்ெகாள்வோம்.
கே. அடுத்த வருட முற்பகுதியில் பொதுத்தேர்தலுக்ேகா அல்லது ஜனாதிபதி தேர்தலுக்ேகா செல்வதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
ப. பொதுத் தேர்தலுக்குச் செல்லும் நோக்கில்தான் பாராளுமன்றத்தைக் கலைத்தோம். அதற்கு அனுமதி கிடைத்தால் மேலதிக நடவடிக்ைகயை மேற்கொள்வோம். உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிலேயே இது தங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தத் தீர்ப்பையும் மதித்து நடக்கத் தயாராக உள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்வதற்கான எந்தத் தேவையும் கிடையாது. இந்தத் தவணை நிறைவடைவதற்கு முழுமையாக ஒரு வருடம் இருக்கிறது.
கே. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் உங்களை எதிர்த்து யார் போட்டியிட வேண்டும் என்று நினை க்கின்றீர்கள்?
ப. அதை நான் சொல்ல முடியாது. எவர் வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்கலாம். இலட்சக்கணக்கான மக்களில் யாராவது ஒருவர் வேட்பாளராக வரக்கூடும். அதனை இப்போது நான் கூற முடியாது.
கே. உங்களுக்குப் போட்டியாக யார் வரவேண்டும்?
ப. முதலில், நான் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதைப் பற்றித் தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால், அதுபற்றிச் சிந்திப்பதற்குத் தொடங்கவில்லை. காலநிலையைப் போன்று அரசியல் எப்போதும் மாறிக்ெகாண்டே இருக்கும்.
கே. உங்களின் வரலாற்றினை மீட்டிப்பார்த்தால், உங்கள் அருகில் மஹிந்த ராஜபக்ஷவை உங்கள் பிரதமராக எவ்வாறு வைத்துள்ளீர்கள்?
ப. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
சண்டே ஒப்சேர்வர்
அநுரங்கி சிங்
தமிழில்
விசு கருணாநிதி