(யது பாஸ்கரன்)
‘பரந்தன் கைத்தொழில் மையமாகவும், கிளிநொச்சி கைத்தொழில், வணிகசேவை மற்றும் தொழில்துறை மையமாகவும், இரணைமடுச்சந்தி சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி மையமாகவும், திருமுறிக்கண்டி பண்பாட்டு மையமாகவும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.’‘கிளிநொச்சி நகரில் நூலகம் இல்லை. சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா கிடையாது கலாசார மண்டபம் இல்லை. பொது வைத்தியசாலை பல குறைபாடுகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தில் சில கடைகளைத் தவிர ஏனையவை பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. பொது விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடையாத நிலையில் காணப்படுகிறது.’
போரினால் சின்னாபின்னமாகி மீண்டெழும் நகரமாக காணப்படும்; கிளிநொச்சி நகரம் தனக்கான ஒரு நகர அமைப்பை கொண்டிருக்காதது, நீண்ட ஒரு குறைபாடாகவே இருந்து வருகின்றது.
அதாவது, வடமாகாணத்தில் இயற்கை வளங்களையும் தொழில்சார் வளங்களையும் கொண்ட ஒரு மாவட்டமாக காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டமானது ஒரு நகர அமைப்பை கொண்டிருக்காத குறைபாட்டினால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் தேவை வருதி வருவோரும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக வைத்தியசாலை, பொதுச்சந்தை, பிரதேச செயலகம், மாவட்டச்செயலகம், போன்ற அரச திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் அல்லது அவற்றுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய முறையில் இன்மை, மற்றும் நகரை அண்மித்த கிராமங்களிற்கான போக்குவரத்து சேவைகள் சீராக இன்மை என்பவற்றால் பலரும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டமானது, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரத்திட்டமிடலுக்குத் தெரிவு செய்யப்பட்டு நகர அபிவிருத்தித்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் இது தொடர்பான போதிய விழிப்புணர்வுகள் இதுவரை மக்கள் மத்தியில் இல்லாத நிலை காணப்படுகின்றது.
ஆயிரத்து 237 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக்கொண்டதும், வருடாந்தம் இரண்டாயிரம் மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியையும் 25 முதல் 30 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலையையும் பெற்றுக் கொள்கின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, ஆகிய போக்குவரத்து பாதைகளின் பிரதான இணைப்பு மையமாகவும் அதனைவிட விவசாய உற்பத்திகள் கைத்தொழில், கல்வி மையம், தொழிற்சாலை மையம் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.
அதாவது வருடாந்தம் காலபோகத்தின் போது சுமார் 59 ஆயிரம் ஏக்கரிலும் சிறுபோகத்தில் பதினையாயிரம் முதல் இருபதாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பிலும் நெல் உற்பத்தி செய்கின்ற ஓர் விவசாய மாவட்டமாகவும் இதனைவிட சிறுதானிய செய்கை, தோட்டச் செய்கை போன்ற உப பயிர்ச்செய்கைகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கிளிநொச்சியின் அறிவியல் நகர்ப் பகுதியானது கல்விசார் வலயமாகத் தெரிவு செய்யப்பட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள், மூன்றாம் நிலைக்கல்வியினை வழங்கும் ஜேர்மன் இலங்கை தொழிற்பயிற்சி நிலையம் என்பன ஆடைத்தொழிற்சாலை, பழச்சாறு உற்பத்தி நிலையம் போன்ற கைததொழில் நிலையங்கள் காணப்படுகின்றன.
அத்துடன், பரந்தன் நகரை அண்டிய பகுதியில் உள்ள ஆனையிறவு உப்பளம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை இதுவரையும் மீள இயங்கவில்லை.
பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகள் என்ற பெயரில் அதன் உற்பத்திகள் தற்போது தென்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு காணப்படும் கிளிநொச்சி மாவட்டம் ஒரு நகர வடிவமைப்பைக் கொண்டிருக்காமல் கிளிநொச்சி நகரம் ஏ-9 வீதியின் பரந்தன் முதல் முறிகண்டிவரைக்குமான பகுதிகளில் நாடாத்தொடரிலான வரத்தக நிலையங்களையும் பொதுக் கட்டங்களையும் கொண்டு காணப்படுகின்றது.
தற்போது மெல்ல மெல்ல நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நவீன நகருக்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு அற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதாவது ஆனையிறவு முதல் அறிவியல் நகர் வரைக்குமான 31 கிராம அலுவலர் பிரிவுகளையும் ஏறத்தாள இரண்டாயிரம் ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட பகுதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரத்துக்கான பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக பொதுச்சந்தைக்கு எதிராக பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நகர அபிவிருத்தி தொடர்பில் பெரும்பாலானோர் வரவேற்கின்ற போதிலும் குறிப்பிட்ட சிலர் தமது காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதற்காக எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர்.
அதாவது, கிளிநொச்சி பொதுச்சந்தையின் நகரதிட்டமிடலுக்கு அமைவாக 765 மில்லியன் ரூபாசெலவில் புதிய சந்தைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த அவிவிருத்தி திட்டத்தின் கீழ் தட்டுவன்கொட்டி, ஊரியான், முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, பரந்தன், பன்னங்கண்டி, மருதநகர் போன்ற கிராமங்களும் அபிவிருத்திக்குள் உள்வாங்கப்படவுள்ளன.
கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி தொடர்பான பல கலந்துரையாடல்கள் பல்வேறுமட்டங்களிலும் நடைபெற்றுள்ளன.
இவ்வாறான கலந்துரையாடல்களில் பரந்தன் பகுதியை கைத்தொழில் மையமாகவும், கரடிப்போக்கு சந்தியை சேவைகளின் மையமாகவும், கிளிநொச்சி நகரை கைத்தொழில் வணிகச்சேவை தொழில்துறை மையமாகவும், இரணைமடுச் சந்தியை சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி மையமாகவும் திருமுறிகண்டியை பண்பாட்டு மையமாகவும் உருவாக்குவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நகர வடிவமைப்பைக்கொண்டிருக்காத கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
அதாவது, ஒரு நகரத்தில் பிரதானமாக இருக்கவேண்டிய கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை, பல்வேறு குறைபாடுகள் கொண்ட வைத்தியசாலையாக காணப்படுகின்றது சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு மருத்துவத் தேவையை வழங்குகின்ற மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்துச் சேவைப்பிரிவு, உள்ளக நோயாளர்களுக்கான போதிய விடுதி வசதிகள் போன்ற வசதிகள் அவசியம்.
இது போன்று நகரை அண்மித்த பகுதிகளில் இயங்க வேண்டிய பொதுச்சேவைகளை வழங்கும் திணைக்களங்கள் ஏ-9 வீதியில் இருந்து சற்றுத்தொலைவில் காணப்படுவதனால் அவற்றை நாடிச்செல்வோரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
கடந்த மீள்குடியேற்றத்தின் பின்னர் நகரத்திட்டமிடலுக்கு அமைவாக அமைக்கப்படாத பல புதிய கட்டடங்கள் இன்று பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இதற்கு கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் நல்லஓர் உதாரணம்.
அதாவது, பல மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வர்த்தக மையத்தில் ஓரிரு கடைகள் தவிர, அனைத்துக் கடைகளும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
நகரில் அமைக்கப்பட்ட பொதுவிளையாட்டு மைதானம், ஆறு ஆண்டுகளாக இன்றும் கட்டுமானப்பணிகள் நிறைவுறாது காணப்படுகின்றன.
இவ்வாறு குறைபாடுகளை அடுக்கிக் கொண்டு போகலாம். மாறாக, கிளநொச்சி நகரம் நவீன வசதிகளைக்கொண்ட ஓர் நகரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது பற்றி காலம்காலமாக குறிப்பிட்டாலும் அது பேச்சளவிலேயே இருக்கின்றது.
இன்றும் நகரத்தில் ஒரு கலாசார மண்டபம் இல்லை. பொதுநூலகம் இல்லை. சிறுவர்களுக்கான பொழுது போக்கு மையங்கள் இல்லை.
இவ்வாறு குறைபாடுகள் நீண்டு செல்கின்றன.
அதாவது ஏ-9 வீதியானது அதிவேக மார்க்கத்திற்கான பாதையாகக் காணப்படும்போது ஏ-9 வீதியின் ஆனையிறவு தட்டுவன்கொட்டிச்சந்தியிலிருந்து தட்டுவன்கொட்டி, கோரக்கன்கட்டு, ஊரியான், பழைய கண்டி வீதி வழியாக பன்னங்கண்டி மருதநகர் ஊடாக சுற்றுலா மையமாக வுள்ள இரணைமடுச் சந்திவரை செல்லும் வெளிச்சுற்றுவட்ட வீதி அமையவுள்ளது. இயற்கை எனவே எழில்மிகு கிளிநொச்சிக்குளத்தினை அண்டியபகுதியில் பூங்கா ஒன்று அமைய வேண்டும்.
மேலும் குறித்த பகுதிகளை உள்ளடக்கிய வகையில் வெளிச்சுற்றுவட்ட வீதி அமையுமிடத்து வருடம் முழுவதும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் தட்டுவன்கொட்டிப் பகுதியில் புதிய நன்னீர் நிலைகளை உருவாக்குதல் அவசியம். நவீன வசதிகள் கொண்ட இறால் வளர்ப்பு முறைகள், மீனவர்களின் தொழில்களை அபிவிருத்தி செய்தல் போன்றவை முன்னெடுக்கப்படும் போது அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
மிகவும் பழமையான வரலாறு கொண்ட கிளிநொச்சி மாவட்டமானது கடந்த 1983ம் ஆண்டிலும் அதன் பின்னர் 1990ம் ஆண்டிலும் பின்னர் 1998ம் ஆண்டுகளிலும் இறுதியாக 2008ம் ஆண்டிலும் யுத்தத்தினால் பேரழிவுகளைச் சந்தித்தது. மதிப்பிடமுடியாத சொத்தழிவுகளையும் மனித உயிரிழப்பையும் சந்தித்து சின்னாபின்னமாகிப்போன மாவட்டம். எதிர்காலத்தில் நவீன வசதிகளையும் கொண்ட ஒரு திட்டமிடப்பட்ட நகரமாகவும் இந்த மாவட்ட மக்களினதும் மாவட்டத்தினதும் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு மாவட்டமாகவும் மாற்றம் பெறவேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.