இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபரிமலைக் கோவிலுக்குள், 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இன்று உள்நுழைந்து, ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இதன்மூலம், வரலாற்றில் முதன்முதலாக, சபரிமலைக்குள் சென்று, பெண்கள் தரிசனம் செய்தனர் என்பது, ஆதாரத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், நடிகை ஜெயமாலா, ஐயப்பன் சிலையைத் தொட்டதாகக் கூறிய போதிலும், அதற்கேதும் ஆதாரம் இல்லாத நிலையில், இவ்விரு பெண்களும், வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணும், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா என்ற பெண்ணுமே, இவ்வாறு தரிசனத்தை மேற்கொண்டனர். இன்று அதிகாலை 3.45 மணியளவில், பொலிஸ் மரியாதையுடன் கோவிலுக்குள் சென்ற அவர்கள், ஐயப்பனைத் தரிசித்தனர்.
இவ்விரு பெண்களும், ஏற்கெனவே கடந்த மாதம் 24ஆம் திகதி, ஐயப்பனைத் தரிசிக்க முயன்ற போதிலும், பக்தர்களின் கடும் எதிர்ப்பால், கீழே இறக்கப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் அண்மைக்கால வரலாற்றில், 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள், கோவிலுக்குள் செல்வதற்குத் தடை காணப்பட்டது. எனினும், இத்தடையை நீக்கி, இந்திய உச்சநீதிமன்றம், கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பின்னரும், ஐயப்பனைத் தரிசிப்பதற்கு, கடுமையான சவாலைப் பெண்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.