2007இல் கேன்சரால்
செத்துப்போன இந்த மனிதன்
தஷ்ரத் மஞ்சி.
ஒரு பிஹார்க்காரக் கூலித் தொழிலாளி.
1960இல் காயமடைந்த தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற
– கிராமத்தின் எல்லையிலிருக்கும் அந்த – கெலூர் மலைக்குன்றுகளைச்
சுற்றிக் கடந்து 70 கிலோமீட்டர் தூரம் ஆஸ்பத்திரிக்குப் பயணித்த துயரம் தஷ்ரத்தின் நெஞ்சை உலுக்கியது.
மலைப்பாதையை செப்பனிட்டுவிட்டால்
அந்த ஆஸ்பத்திரிக்கு ஒரே கிலோமீட்டரில் போய்விடலாம்.
ஊர் சேர்ந்து தேரிழுக்கலாம் வாருங்கள்
என்று கேட்டுப்பார்த்தார்.
ஒருத்தனும் மசியவில்லை.
“மலையைச் செப்பனிடுவது நடக்கிற வேலையா தஷ்ரத் ? போ. போய் உன் ஆடுகளுக்குத் தண்ணி காட்டு….”
என்றார்கள்.
நொந்துபோன தஷ்ரத் – வீட்டிலிருந்த ஆட்டுக்குட்டிகளை விற்றுவிட்டு – அந்தப் பணத்தில் ஒரு கடப்பாரை – மண்வெட்டி – இவற்றை வாங்கினார்.
தினமும் சாயந்தரம்
மலைக்குன்றுக்குப் போய் – அந்தக் கரடுமுரடான கற்பாறைகளை வெட்ட ஆரம்பித்தார்.
எளிதில் நடக்கிற விஷயமா?
அதுவும் ஒத்தை ஆளால்?
காய்ந்த சுள்ளிகளை – விறகுகளைப் பொறுக்கிவந்து – இறுகிய பாறைகளின்மீது போட்டுக் கொளுத்தினார். பாறை நன்கு சூடானபிறகு – அதன்மீது தண்ணீரை ஊற்றி இளகவைத்தார். பிறகு பாறைகளைப் பிளப்பது முன்னைவிட சற்றுச் சுலபமானது.
கிராமத்து அறிவு!
சோற்றுப்பாட்டுக்காக பகலெல்லாம் – அடுத்தவர் வயல்களில் கூலிவேலை.
சூரியன் இறங்கியதும் மலையை நோக்கி
அசகாயப் பிரயத்தனப் பயணம் !
ஊரே கூடிநின்று கேலி பேசும்.
எதிர்த்து ஒரு வார்த்தை?
ஊஹும்.
‘போய்க் கொண்டேயிரு தஷ்ரத்….’
ஒருநாளா இருநாளா?
சத்தியம் மக்களே….
22 வருஷங்கள்!
1960இல் கிளர்ந்த நெஞ்சுரம் –
சேவை மனப்பான்மையாக மலர்ந்து –
1982இல் –
அருமையான ஒரு பாதையாக உருவெடுத்தது.
30 அடி அகலத்தில் 360 அடி நீளத்துக்கு
மலைப்பாதை. இனி ஆஸ்பத்திரிக்கு
70 கிமீ போகவேண்டாம்.
இப்போது ஊரே தஷ்ரத்தைத் தோளில் தூக்கிக்
கொண்டாடியது. பஞ்சாயத்தில் பொன்னாடை போர்த்தினார்கள். ‘மலை மனிதன்’ என்ற பட்டம் வேறு.
தஷரத் இறந்தபோது –
பிஹார் அரசாங்கம் அரசு மரியாதையுடன்
அவர் உடலை தகனம் செய்தது.
அதை – மரியாதை என்பதைவிட –
குற்றவுணர்வு என்று சொல்லலாம்தானே?
(Rathan Chandrasekar)