தாயகத்திலும் உலகம் எங்கும் நினைவு கூரப்படும் தியாகிகள் தினம் இவ்வருடம் கனடாவின் பல்வேறு அரசியல் கருத்துடையோரின் சந்திப்பொன்றின் மூலம் நடாத்தப்பட்டது. மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கும் ஒரு நிமிட அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது. சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களின் நினைவுகளை முன்தாங்கியதாக ஆரம்பமான சந்திப்பு கலந்துரையாடல் தற்போதைய இலங்கை அரசியல் சூழலை ஆராய்வது வரை விரிந்து சென்றது. பத்மநாபா போன்ற மகத்தான தலைவர்களின் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவ செயற்பாடுகள், போராடும் சிறுபான்மை மக்களுக்கிடையேயான உறவுகள், மாற்றுக் கருத்தாளர்களிடையேயான ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் என்பன எந்தளவிற்கு அவர் மறைவின் பின்பு முன்னேற்றம் அடைந்தன என்ற கருத்துக்கள் கேள்வியாக இங்கு எழுப்பப்பட்டது இச் சந்திப்பு கலந்துரையாடலின் சிறப்பாக அமைந்தது. இரு மணிநேரம் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தோழர் நாபாவின் சிந்தனைகளை வலுப்படுத்தி மேலும் அவர் பாதையில் நாம் முன்னேற வேண்டிய அவசியத்தை வலியறுத்தி நிறைவு பெற்றது.