மஹிந்த அணியின் அடுத்த இலக்கு!

இவ்வருடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் உரிய இலக்குகளை அடைய முடியாமல் போன நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதலைமையிலான எதிரணியினர் தற்போது அடுத்த இலக்கை நோக்கி அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள முடியாமல் போனமை ஒருபுறமிருக்க, கடந்த ஒரு வருட காலப் பகுதியில் கூட்டரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த பிரயத்தனங்கள் எதுவுமே பலன் தந்து விடவில்லை.

இவ்வாறான தோல்விகளையடுத்து மஹிந்த அணியினர் உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்து திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஜூன் மாதத்திலேயே நடைபெறவிருப்பதாக நேற்று உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியான கலப்பு முறையிலேயே தேர்தல் நடைபெற விருப்பதாகவும் நேற்றைய அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மஹிந்த அணியினரின் அடுத்த பிரதான இலக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகும். உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைக்கும் உள்ளக்கிடக்கையை மஹிந்தவும் அவரது சகாக்களும் ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவு சபைகளைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கு அதிகளவு செல்வாக்கு உள்ளதாக காண்பிப்பதே மஹிந்த அணியினரின் நோக்கமாகும். இதன் மூலம் அரசுக்கு எதிர்காலத்தில் மறைமுக அழுத்தத்தையும் மிரட்டலையும் பிரயோகிக்க முடியுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேசமயம் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணியினர் எந்தக் கட்சியின் கீழ் களமிறங்குவரென்பதில் நிலவி வருகின்ற பலவித ஊகங்களுக்கும் முடிவு எட்டப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டிணைந்து பெரும்பான்மைப் பலமுள்ள அரசாங்கத்தை ஸ்தாபித்திருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தனது வேட்பாளர் அணியை சுதந்திரக் கட்சியினூடாக களமிறங்குவதென்பது நடைமுறைச் சாத்தியமான விடயமல்ல.

எனவே ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் சவால் விடுக்கும் வகையில் மாற்று அணியொன்றை உருவாக்கி உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதே மஹிந்தவுக்கு உள்ள ஒரேயொரு தெரிவு ஆகும்.

மஹிந்தவின் இவ்வாறான திட்டம் குறித்து நேற்றுமுன்தினம் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது தவிர்க்க முடியாததென மஹிந்த நேற்றுமுன்தினம் கூறியிருப்பது ஒருபுறமிருக்க, உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் ஆயத்தங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்துகளையும் இன்றைய அரசியல் நிலைவரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்க்குமிடத்து, புதியதொரு கட்சியை ஸ்தாபித்தே உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த அணி களமிறங்குமென்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர்களது திட்டங்கள் அவ்வாறாக இருந்தாலும் இன்றைய அரசியல் நிலைவரம் மஹிந்த அணியினருக்கு வாய்ப்பாக இல்லையென்பதையே களநிலைமை புலப்படுத்துகின்றது. மஹிந்த அணியைச் சேர்ந்த சுமார் பதினைந்து பேர் விரைவில் அரசாங்கத்தின் பக்கம் வரவிருப்பதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இரு தினங்களுக்கு முன்னர் பரபரப்புத் தகவலொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் அரசாங்கம் தனது ஸ்திரத்தன்மையை நிரூபித்திருக்கும் இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்பது புதுமையானதொரு செய்தியுமல்ல.

பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருக்கும் அணியொன்றுடன் தொடர்ந்து இணைந்திருப்பதில் எம்.பிக்கள் இனிமேலும் விருப்பம் கொள்வரென எதிர்பார்க்க முடியாது. எனவே மஹிந்த தரப்பிலிருந்து மேலும் பலர் அரசாங்கத் தரப்புக்கு வந்து சேருவரென்ற ஊகங்களை நிராகரிக்க முடியாதிருக்கிறது.

இவ்வாறான பலவீனம் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்திருக்கிறார் மஹிந்த.

உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் மத்திய ஆட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது. மாகாண சபைகளும் மத்திய அரசும் ஐ.தே.க. – சு.க. கூட்டணியின் அதிகாரத்தில் இருக்கையில் உள்ளூராட்சி சபைகள் மாத்திரம் மஹிந்த அணியின் கைகளுக்குச் சென்று விடுமென எதிர்பார்ப்பதும் தவறு.

ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. அவருடன் சேர்ந்திருக்கும் சகாக்களின் நிலைப்பாடும் அதுதான். இனவாதக் கருத்துகளை விதைத்து மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு உள்ளூராட்சித் தேர்தல் மேடையை அவர்கள் பெரிதும் பயன்படுத்துவரென்பது மட்டும் நிட்சயம்.
(Thinakaran)