(ஆசிரியர்: Medlife வலைப்பதிவாளர்)
நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட சிறிய அளவினைப் பெற்ற சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். அரிசி போன்றவற்றிற்கு நல்ல மழை தேவைப்படும். ஆனால் இந்தச் சத்து மிக்க சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. எனவே இதனை முதல் தானிய வகை உணவு என்று கூடச் சொல்லலாம்.