பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொது வெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம் தெரியும்’ என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.